நோபல் பரிசு கிடைக்காத ஏமாற்றம்: நார்வே பிரதமருக்கு டிரம்ப் கடிதம்
வாஷிங்டன்:
அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாததால் ஏற்பட்ட மனவெதும்பலில், “இனி அமைதி பற்றியே மட்டும் சிந்திக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை” என அமெரிக்க அதிபர் டிரம்ப், நார்வே பிரதமர் ஜோனஸ் கர் ஸ்டோருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் மோதல் உள்ளிட்ட உலகளவில் பல போர்களை தாம் தடுத்து நிறுத்தி, அமைதியை ஏற்படுத்தியதாக டிரம்ப் தொடர்ந்து கூறி வந்தார். இதற்காக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வெளிப்படையாக வலியுறுத்தினார்.
ஆனால் கடந்த ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசு, தென் அமெரிக்க நாடான வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டது. இதனால் டிரம்பின் எதிர்பார்ப்பு முற்றிலும் குலைந்தது.
இதற்கிடையே, கடந்த 3-ஆம் தேதி வெனிசுலாவில் அதிரடியாக நுழைந்த அமெரிக்க ராணுவம், போதைப் பொருள் கடத்தலுக்கு உதவியதாக குற்றம்சாட்டி, அந்த நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோராவை கைது செய்து அமெரிக்க சிறையில் அடைத்தது. இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால அதிபராக பதவியேற்றார்.
இந்த நடவடிக்கையால் வெனிசுலாவுக்கு சுதந்திரம் கிடைத்ததாகக் கூறி, மரியா கொரினா மச்சாடோ, தமக்கு வழங்கப்பட்ட நோபல் அமைதி பரிசை டிரம்பிடம் வழங்கினார். இதனை டிரம்ப் பரஸ்பர மரியாதையாக பாராட்டினார்.
ஆனால் நோபல் பரிசுக் குழு, அறிவிக்கப்பட்ட பரிசை வேறு ஒருவருக்கு மாற்ற முடியாது என எதிர்ப்பு தெரிவித்தது.
இதனால் மேலும் மனவெதும்பிய டிரம்ப், நோபல் பரிசு வழங்கும் நாட்டின் பிரதமரான ஜோனஸ் கர் ஸோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில்,
“எட்டுக்கும் மேற்பட்ட போர்களை தடுத்த பிறகும் எனக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை. எனவே இனி அமைதி பற்றியே மட்டுமே சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும், அமைதி என்பது எனது முக்கிய முன்னுரிமையாகவே தொடரும். தற்போது அமெரிக்காவுக்கு எது நல்லது, எது சரியானது என்பதையே நான் முதன்மையாகக் கருதுவேன்” என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
