திருவனந்தபுரம்:
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் அனைத்து நம்பிக்கைகள் மற்றும் கொள்கைகளுக்கும் 100 சதவீதம் ஆதரவு அளிக்க முடியாது என காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தெரிவித்துள்ளார்.
அரசுப் பணத்தில் பாபர் மசூதி கட்ட நேரு திட்டமிட்டதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, நேரு விவகாரத்தில் பாஜ–காங்கிரஸ் இடையே கருத்து மோதல் நீடித்து வருகிறது. இந்த பின்னணியில், 4வது கேரள சட்டசபை சர்வதேச புத்தக திருவிழாவில் பேசிய சசிதரூரின் கருத்துகள், காங்கிரஸ் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளன.
அவர் பேசுகையில், “நான் நேருவின் ரசிகன் தான். ஆனால் விமர்சனம் செய்யாத ரசிகன் அல்ல. அவரது சிந்தனை, கண்ணோட்டம் மீது எனக்கு பெரும் மரியாதை உண்டு. அதே நேரத்தில், அவருடைய அனைத்து கொள்கைகளுக்கும் முழுமையான ஆதரவு தர முடியாது,” என தெரிவித்தார்.
மேலும், இந்தியாவில் ஜனநாயகத்திற்கு வலுவான அடித்தளம் அமைத்ததில் நேருவின் பங்கு முக்கியமானது என்றும், நாட்டின் அனைத்து பிரச்னைகளுக்கும் அவரை மட்டுமே குறை கூறுவது நியாயமற்றது என்றும் சசிதரூர் குறிப்பிட்டார். 1962 சீனப் போரில் ஏற்பட்ட தோல்விக்கு நேருவின் சில முடிவுகள் காரணமாக இருக்கலாம் என்றாலும், ஒவ்வொரு பிரச்னைக்கும் நேருவை குறை சொல்வதை பாஜ வழக்கமாக்கியுள்ளது என்றும் அவர் விமர்சித்தார்.
