சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபடியும் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்றால், மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.) விசாரணை கோரப்படும் என அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பு இயக்குநர் துரைகுமாருக்கு, இன்பதுரை சார்பில் வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், 2025 அக்டோபர் 27ம் தேதி அமலாக்கத் துறை அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில் அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறை அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமீபத்தில் உத்தரவிட்டது.
அத்தகைய உத்தரவு இருந்தும், வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பது கவலைக்கிடமானது என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. அமைச்சர் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்து, அதனை அதிகாரப்பூர்வமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இல்லையெனில், கடமையில் தவறியதாக கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
