ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று அதிர்ச்சி சம்பவம் நடந்தது. நீதிபதி சுதாகரை நோக்கி அரிவாள் வீசிய பாலமுருகன் (36) போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் செங்குளம் பகுதியை சேர்ந்த பாலமுருகன், இன்ஜினியரிங் படித்தவர். தற்போது விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி தங்க முனீஸ்வரி, வாழ்க்கை பராமரிப்பு செலவு தொகை கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை கூடுதல் பொறுப்பு வகிக்கும் நீதிபதி சுதாகர் விசாரித்து வந்த நிலையில், பிப்ரவரி 17 அன்று உத்தரவு பிறப்பிக்கப்படவிருந்தது.
நேற்று காலை, பாலமுருகன் தனது வீட்டில் இருந்து நீதிமன்ற வளாகத்தின் பின்புறம் உள்ள கண்மாய் வழியாக வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து, காலை 11:30 மணியளவில் நீதிமன்ற அறை அருகே சென்றார்.
நீதிமன்ற அறையின் கிழக்கு வாசலில் நின்று, தன்னுடன் கொண்டு வந்த பையில் இருந்து இரண்டு அடி நீள அரிவாளை எடுத்த அவர், நீதிபதி சுதாகரை நோக்கி வீசினார். அரிவாள் வழக்கறிஞர்கள் மேஜையில் பட்டு தரையில் விழுந்ததால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
சம்பவம் நடந்ததும் நீதிபதி, வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் அங்கு இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அங்கிருந்த போலீசார் பாலமுருகனை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இந்த சம்பவத்தையடுத்து டிஎஸ்.பி. பாலசுந்தரம் தலைமையில் ஏராளமான போலீசார் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட நிலையில், பிற்பகல் 12:30 மணிக்கு வழக்கமான பணிகள் மீண்டும் துவங்கின.
சம்பவ இடத்தை முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் மற்றும் எஸ்.பி. கண்ணன் பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர். நீதிமன்ற சிரஸ்தார் முருகையா அளித்த புகாரின் பேரில், பாலமுருகன் மீது டவுன் போலீசார் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
