நீதிபதி சுவாமிநாதன் விவகாரம்: நடவடிக்கை என்ன? – தமிழக அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக வெளிப்பட்ட விமர்சனங்கள் மற்றும் போராட்டங்கள் தொடர்பாக தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை விளக்குமாறு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகப்பெருமான் கோவிலின் மலை உச்சி தீபத்தூணில் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்ற வேண்டும் என்ற வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உத்தரவிட்டார். அந்த உத்தரவை தமிழக அரசு மேல்முறையீடு செய்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றமும் தனி நீதிபதி தீர்ப்பை உறுதி செய்தது.
இருப்பினும், தீர்ப்பு வெளியான நாள் முதலே நீதிபதி சுவாமிநாதனை குறிவைத்து அவதூறு கருத்துகள், விமர்சனங்கள் மற்றும் போராட்டங்கள் பல்வேறு இடங்களில் நடந்தன. சில அரசியல் கட்சிகள் அவரது பதவி நீக்கத்தை கோரி பாராளுமன்ற சபாநாயகரிடம் மனு அளித்ததுடன், நீதிபதியை அவமதிக்கும் வகையிலான பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டன. மேலும், அவரை இழிவுபடுத்தும் வகையில் ஒரு புத்தகம் வெளியிட முயற்சி மேற்கொள்ளப்பட்டு, சென்னை உயர்நீதிமன்ற தலையீட்டுக்குப் பிறகு அது நிறுத்தப்பட்டது.
இந்த சூழலில், நீதிபதிக்கு எதிராக அவதூறு பரப்புவோர் மற்றும் போராட்டம் நடத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அரவிந்த் குமார் மற்றும் பிரசன்னா பாலசந்திர வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு, “இந்த விவகாரத்தில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?” எனக் கேள்வி எழுப்பியது.
இதுகுறித்து விரிவான விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
