புதுடில்லி: நாட்டின் பாதுகாப்பை எந்த நிலையிலும் சமரசம் செய்ய முடியாது என்பதாலேயே பாதுகாப்புத் துறைக்கு மத்திய பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்ய முடியாது. கடந்த 10 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறையில் செலவிடப்பட்ட நிதி எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது என்பதை ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை எடுத்துரைத்துள்ளது. ஒரு காலத்தில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு அடிப்படை உபகரணங்களே இல்லாத நிலை இருந்தது. குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் கிடைக்கவில்லை; துப்பாக்கிகள் இருந்தாலும் தோட்டாக்கள் இல்லாத சூழல் நிலவியது. தற்போது அந்த நிலை மாறியுள்ளது என்றார்.
முரண்பட்ட கோரிக்கைகளை நிர்வகிப்பது ஒவ்வொரு நிதியமைச்சரும் எதிர்கொள்ள வேண்டிய சவாலாகும் என்றும், கூடுதல் வளங்களைப் பெறுவதற்காக வரிகளை உயர்த்துவது எப்போதும் தீர்வாக இருக்காது என்றும் அவர் கூறினார். ஆனால் நாட்டின் தேவைகளை நிறைவேற்ற பணம் அவசியம் என்றும், கோவிட் காலத்தில் தடுப்பூசிகளை வாங்க வேண்டியிருந்த போதும் குடிமக்கள் மீது வரிகள் உயர்த்தப்படக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
மக்கள் மீது ஒரு ரூபாய் கூட கூடுதல் வரி விதிக்கப்படுவதை விரும்பவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெளிவுபடுத்தியதாக அவர் கூறினார். இந்தியாவில் தயாரிக்கப்பட்டாலும் அல்லது இறக்குமதி செய்யப்பட்டாலும் தடுப்பூசிகளை பெற வேண்டிய அவசியம் இருந்தது என்றும், உயிர் காப்பாற்றுவது முக்கியம் என்பதால் ஒரு ஊசிக்கு குடிமக்களிடம் ரூ.500 வசூலிக்க முடியாது என்றும் அவர் விளக்கினார்.
நெருக்கடி காலங்களில் அவசர தேவைகளை நிறைவேற்ற அரசு கணிசமாக கடன் வாங்க வேண்டியிருந்ததாகவும், தற்போது பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் கடனைக் குறைப்பதற்கும் நிதி சமநிலையை மீட்டெடுப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
