புதுடில்லி: லோக்சபாவில் விவாத நேரத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசியபோது, முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம். நரவனே எழுதியதாக கூறப்படும் வெளியிடப்படாத புத்தகத்தை மேற்கோள் காட்டியதற்கு, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் லோக்சபாவில் காரசார வாக்குவாதம் ஏற்பட்டது.
ராகுல் பேசுகையில், இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாகவும், இதுகுறித்து முன்னாள் ராணுவத் தளபதி நரவனே எழுதிய சுயசரிதை புத்தகத்தை வெளியிட மத்திய அரசு தடுத்துள்ளதாகவும் கூறினார்.
அவர் பேசிக் கொண்டிருந்தபோது, அமித் ஷா மற்றும் ராஜ்நாத் சிங் குறுக்கிட்டு பேசினர். நரவனே எழுதியதாக கூறப்படும் சுயசரிதை புத்தகத்தில் உள்ள விஷயங்களை அவையில் வாசிக்கக் கூடாது என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இதனை ஆதரித்த அமித் ஷா, அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட ஆதாரங்களை மட்டுமே அவையில் குறிப்பிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, ஆதாரமற்ற எந்த விஷயத்தையும் அவையில் தான் குறிப்பிடவில்லை என்று தெரிவித்தார்.
ராகுலுக்கு ஆதரவு
இதனைத் தொடர்ந்து, ராகுல் பேச்சில் தவறு இருந்தால் ராஜ்நாத் சிங் பதில் அளிக்கலாம், ஆனால் அவரை பேச விடாமல் தடுக்கக் கூடாது என்று காங்கிரஸ் எம்பி வேணுகோபால் தெரிவித்தார்.
மேலும், சீன ஆக்கிரமிப்பு குறித்து ராகுல் பேசும்போது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ராகுலுக்கு ஆதரவாக கேள்வி எழுப்பினார்.
பாஜக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் போட்டி முழக்கமிட்டதால், லோக்சபாவில் கடும் சலசலப்பு ஏற்பட்டது. ராகுலை பேச விடாமல் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், எதிர்க்கட்சியினரும் முழக்கமிட்டனர்.
ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக, லோக்சபா மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
