புதுடில்லி: தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக கடந்த 70 நாட்களாக காத்திருக்கிறோம். காங்கிரஸ் தொண்டர்கள் வேதனையில் உள்ளனர் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.
தமிழகத்தில் அதிமுக பாஜவுடன் கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தல் பணிகளில் மும்முரமாக உள்ளது. திமுகவும் மாவட்டங்கள் மற்றும் மண்டலங்கள்தோறும் மாநாடுகள், கூட்டங்களை அறிவித்து களப்பணியில் ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் தொகுதி பங்கீட்டுக்காக 5 பேர் கொண்ட கமிட்டியை அமைத்து திமுகவுடன் பேச தயாராக உள்ளது. ஆனால் 70 நாட்களாகியும் கூட்டணி விவகாரம் மற்றும் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக எந்த முன்னேற்றமும் இல்லை.
இந்த நிலையில் தமிழகம், பஞ்சாப் உள்ளிட்ட 8 மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் டில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கலந்து கொண்டார்.
ஆலோசனைக்கு பின்னர் அவர் கூறியதாவது: கூட்டணி விவகாரத்தில் காங்கிரசிடம் எந்த குழப்பமும் இல்லை. நாங்கள் தெளிவாக உள்ளோம். நிர்வாகிகள் யாரிடமும் குழப்பம் இல்லை. தேர்தல் பணிக்குழு மற்றும் பேச்சுவார்த்தை நடத்தும் குழு இன்னும் நியமிக்கப்படவில்லை என்பதில் அனைவரும் வருத்தம் தெரிவித்தனர்.
கடைசி நேரத்தில் களப்பணிக்கு செல்லும் அனுபவத்தில் பல படிப்பினைகள் உள்ளன. பீஹார், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல்களில் கடைசி நிமிடத்தில் சிரமம் ஏற்பட்டது. இந்த அனுபவத்தை கருத்தில் கொண்டு முன்னதாகவே பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி ஒதுக்கீட்டில் தெளிவு பெற வேண்டும். 234 தொகுதிகளிலும் பணியாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. திமுக தலைவர் மற்றும் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக பேச்சுவார்த்தை கமிட்டியை அமைக்க வேண்டும் என்பதே ராகுலின் கருத்து.
தொடர்ந்து கிரிஷ் சோடங்கர் கூறியதாவது: தமிழ்நாடு காங்கிரசை பொறுத்தவரையில் நாங்கள் தெளிவாக உள்ளோம். கடந்தாண்டு நவம்பரில் கூட்டணி பேச்சுவார்த்தைக்கான 5 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. டிசம்பர் 3ம் தேதி அந்த குழுவினர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர்.
கமிட்டி அமைக்கப்பட்டு 70 நாட்களாகிவிட்டது. கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். எத்தனை தொகுதிகளில் போட்டியிட போகிறோம் என்ற தெளிவு இருந்தால்தான் தேர்தல் பணிகளுக்கு தயாராக முடியும். ஆனால் இன்னும் திமுக தரப்பில் குழு அமைக்கப்படவில்லை. பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை. இது கவலை அளிக்கிறது.
எங்கள் தொண்டர்கள் வலியுடன் உள்ளனர். கட்சி தலைவர்களும் வருத்தத்தில் உள்ளனர். ஏன் இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை என்று தொண்டர்கள் தொடர்ந்து கேட்கின்றனர். நாங்கள் தாமதம் செய்கிறோம் என்ற தோற்றம் உருவாகிறது. ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை.
தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம். போதிய நேரம் தேவை. தாமதத்திற்கு காரணம் எதுவென்று தெரியவில்லை. இந்த விஷயத்தில் யார்மீதும் குறை சொல்லவில்லை. 70 நாட்களாக காத்திருக்கிறோம் என்ற நிலையை மட்டுமே தெரிவிக்கிறோம். நாங்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வேண்டுகோள் வைத்துள்ளோம். பேச்சுவார்த்தை அவசியம் என்பதை கூறியுள்ளோம். திமுக ஆர்வமாக உள்ளதா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் நாங்கள் காத்திருக்கிறோம்.
இவ்வாறு கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.
