சென்னை: தேர்தலை காரணம் காட்டி வழக்கமான காவல் துறை பணிகளை தவிர்க்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் காவல் துறையினரை அறிவுறுத்தியுள்ளது.
வாகனங்களை அதிவேகமாக ஓட்டியதுடன், பைக் ரேஸ் சாகசங்களில் ஈடுபட்டதாக சென்னை மாநகர போலீசார் 2024ல் இரண்டு வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, போக்குவரத்து காவல் துறை கூடுதல் கமிஷனர் ஆர். சுதாகர் அளித்த அறிக்கையை மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.
அறிக்கையில் கூறப்பட்டதாவது: சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பைக் ரேஸ் நடத்தும் நபர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். பைக் ரேசில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளின் விபரங்கள் காவல்துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 107 பேர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டோம் என உறுதி அளித்துள்ளனர். பிடிபட்டவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள்; அவர்களின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நீதிபதி கூறியதாவது: அறிவியல்பூர்வ ஆய்வின்படி 2022ல் 1.68 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். மேலும் 4.43 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர். எனவே, பொது சாலைகளில் போக்குவரத்து குற்றங்களில் ஈடுபடும் இளம் குற்றவாளிகளை கையாள காவல் துறை மாதிரி திட்டம் செயல்படுத்த வேண்டும்.
சட்டசபை தேர்தலை காரணம் காட்டி வழக்கமான காவல் துறை பணிகளை தவிர்க்கக்கூடாது. தாமதத்திற்கு தேர்தலை காரணமாக கூறக்கூடாது. போக்குவரத்து குற்றங்களில் ஈடுபடும் இளம் குற்றவாளிகளை கையாளுவதற்கான திட்டத்தை வரும் 25ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
