புதுடில்லி:
போதைப்பொருள் பயங்கரவாதத்தை அடுத்த மூன்று ஆண்டுகளில் முழுமையாக ஒழிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
டில்லியில் நடைபெற்ற போதைப்பொருள் ஒருங்கிணைப்பு மையத்தின் 9-வது உயர்மட்டக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், இந்தியாவை போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்ற மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
போதைப்பொருள் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை தேசிய அளவில் ஒருங்கிணைந்து முன்னெடுக்க வேண்டும் என்றும், மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
2026 மார்ச் 31 முதல் மூன்று ஆண்டுகளுக்கு நாடு முழுவதும் ஒருங்கிணைந்த பிரசாரம் நடத்தப்பட்டு, இந்த பிரச்னை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
போதைப்பொருள் பிரச்னை என்பது வெறும் சட்டம்-ஒழுங்கு சிக்கல் அல்ல என்றும், அது நாட்டின் பாதுகாப்புக்கும், வருங்கால தலைமுறையின் எதிர்காலத்திற்கும் நேரடி அச்சுறுத்தலாக இருப்பதாக அமித் ஷா சுட்டிக்காட்டினார்.
இளைஞர்களின் உடல் நலம், சிந்தனை திறன் மற்றும் செயல்பாட்டு ஆற்றலை சீரழிக்கும் சதியாக போதைப்பொருள் மாறியுள்ளது என்றும் அவர் எச்சரித்தார்.
கடந்த 10 முதல் 11 ஆண்டுகளில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், இந்தப் போராட்டத்தில் இந்தியா முக்கியமான வெற்றிகளைப் பெற்றுள்ளதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.
