சென்னை: “முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில், தமிழகம் தலைகுனிந்து தொங்கிப்போச்சு,” என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., கட்சி தலைமை அலுவலகத்தில், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
இரண்டு மாதங்களுக்கு முன்பு, “பழனிசாமி கடைவிரித்தும் கூட்டணிக்கு யாரும் வரவில்லை” என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்தார். ஆனால், இன்று அ.தி.மு.க., தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பலம் வாய்ந்ததாக அமைந்துவிட்டதால், தினமும் ஏதாவது அவதூறு பேசுகிறார். “தமிழகம் தலைகுனியாது” என அவர் பிரசாரம் செய்கிறார்.
ஆனால், அவரது ஆட்சியில் தான் தமிழகம் தலைகுனிந்து தொங்கிப்போச்சு. கொரோனா காலத்தில் ஒரு ரூபாய் கூட வருவாய் இல்லாமல் ஆட்சியை நடத்தினேன். இப்போது நடைமுறையில் சாத்தியமுள்ள திட்டங்களை மட்டுமே வாக்குறுதியாக அளிக்கிறேன்; நிச்சயம் நிறைவேற்றுவேன்.
த.வெ.க., தலைவர் விஜய், கரூர் சம்பவத்திற்கு பிறகு 72 நாட்கள் வெளியே வரவில்லை. மக்களை சந்திக்க கூட அவருக்கு நேரமில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அ.தி.மு.க., தான் தலைமை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெளிவுபடுத்தி விட்டார்.
அதன் பின்னரும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு யார் தலைமை என விஜய் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். நாட்டில் என்ன நடக்கிறது, யார் யாருடன் கூட்டணி வைத்துள்ளனர், அதற்கு யார் தலைமை வகிக்கிறார் என்பதே அவருக்கு தெரியவில்லை.
பொதுவெளிக்கு வந்தால்தான் அரசியல் தெரியும். ஒரு கட்சியின் தலைவராக இருந்தும் இன்னும் அறியாமையில் இருக்கிறார். ஒருமுறையாவது செய்தியாளர்களை சந்தித்து, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தால் தான் நாட்டு நடப்புகள் புரியும்.
அ.தி.மு.க., தலைவர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை ‘ரோல் மாடல்’ என கூறும் விஜய், அவர்கள் வழியில் ஆட்சி நடத்திய எங்களை ‘ஊழல் சக்தி’ என்கிறார். என் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. நீதிமன்றத்தில் நிரபராதி என தீர்ப்பு பெற்றேன். ஆனால், அ.தி.மு.க.,விலிருந்து வெளியேறி விஜயுடன் இருப்பவர்தான், ஊழல் வழக்கில் சிறை சென்று வந்தவர்.
ஜெயலலிதாவுக்கு உண்மையாக இருந்தவர்கள், அவரது ஆசீர்வாதத்துடன் கட்சியில் இருக்கிறோம். அ.தி.மு.க.,வுக்கு துரோகம் செய்தவர்கள், ஜெயலலிதாவின் ஆன்மாவால் துரத்தப்பட்டுள்ளனர். சசிகலா விவகாரம் முடிந்துவிட்டது. இனி அதுகுறித்து பேசுவதால் பயன் இல்லை. அதனால் அது பற்றி என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்.
இவ்வாறு பழனிசாமி தெரிவித்தார்.
கல்விக்கடன் முழுதும் தள்ளுபடி
சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க.,வின் முதல்கட்ட வாக்குறுதிகளாக ஐந்து அறிவிப்புகளை கடந்த மாதம் வெளியிட்ட பழனிசாமி, அதன் தொடர்ச்சியாக நேற்று மேலும் ஐந்து வாக்குறுதிகளை அறிவித்தார்.
அவை:
-
முதியோர், கைம்பெண்கள், முதிர்கன்னிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்படும் சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.1,200ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்
-
மாணவர்கள் கல்விக்காக பெற்ற கல்விக்கடன் முழுவதையும் அரசே திருப்பி செலுத்தும் வகையில் தள்ளுபடி செய்யப்படும்
-
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு மூன்று சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்
-
ஜல்லிக்கட்டில் உயிரிழந்தால் ரூ.10 லட்சம்; படுகாயமடைந்தோருக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும். போட்டியை ஊக்கப்படுத்த ரூ.5 லட்சம் மானியம் வழங்கி, ஆன்லைன் பதிவு முறை ரத்து செய்யப்படும்
-
சிறுபான்மையின பெண்கள் சுயதொழில் துவங்க வட்டியில்லா கடன் வழங்கப்படும்; மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்
