தீபம் ஏற்ற ஆதரவு தராத கட்சிகளுக்கு ஆதரவு இல்லை: பக்தர்கள் கருத்து
திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு ஆதரவு வழங்காத அரசியல் கட்சிகளுக்கு தங்களின் ஆதரவு இல்லை என அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
பழநி ஆண்டவர் கோயிலை சேர்ந்த பூர்வ குடி மக்களின் சார்பில் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கிராம மக்கள் சார்பில் விரைவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். அந்த போராட்டத்திற்கு அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தங்களுக்கு ஆதரவு அளிக்காத கட்சிகள், இன்னும் நான்கு மாதங்களுக்கு பிறகு ஓட்டு கேட்டு வரும் போது எங்கள் முகத்தில் எப்படி பார்க்கப் போகிறார்கள் என்பதை காண விரும்புகிறோம் என்றும், தீபம் ஏற்றுவதற்கு ஆதரவு தராத கட்சிகளுக்கு எங்களின் ஆதரவு இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும், போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் தீபம் ஏற்றுவதை தடுத்து நிறுத்தியதாக அவர் குற்றம்சாட்டினார். இதனை எதிர்த்து, ஊர் பொதுமக்கள் சார்பில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரியபோது, போலீசார் மறுத்ததால் நீதிமன்ற உத்தரவை பெற்றே உண்ணாவிரதம் இருந்ததாகவும், அதற்குப் பிறகும் அரசு செவிசாய்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.
பூர்வ குடிகளாகிய நாங்கள், மலை உச்சியில் உள்ள சிவன் மலையில் அமைந்துள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது எங்களின் நீண்டகால கோரிக்கை என்றும் அவர் கூறினார்.
தங்களின் கோரிக்கைக்கு ஆதரவு அளிக்காத கட்சிகள் தேர்தல் பிரசாரத்திற்கு வந்தால், கருப்புக்கொடி காட்டி கண்டனம் தெரிவிப்போம் என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும், பக்தர்கள் வழங்கும் உண்டியல் பணத்தை பயன்படுத்தி, தீபம் ஏற்றக்கூடாது என நீதிமன்றத்தில் வாதிடும் வழக்கறிஞர்களுக்கு அரசு பணம் வழங்கப்படுவது எந்த வகையில் நியாயம் என்றும் கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பினார்.
