மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய உத்தரவை நிறைவேற்றாததைத் தொடர்ந்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க அவகாசம் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் அரசியல் கலக்கக்கூடாது என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான வழக்கில், மார்ச் 2ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது மதுரை மாவட்ட கலெக்டர் பிரவின் குமார் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அப்போது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், நீதிமன்றம் நியமிக்கும் ஐந்து பேர் கொண்ட குழுவை மலை உச்சியில் உள்ள தீபத்தூண் அருகே அனுமதித்து, 15 நிமிடங்கள் அடையாள வழிபாடு நடத்த அனுமதிக்கலாம் என பரிந்துரைத்தார். இது கட்டாய உத்தரவு அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு அரசு தரப்பில் பின்னர் கருத்து தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் மார்ச் 4ஆம் தேதி மாலை 4 மணிக்கு மதுரை போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர், உதவி கமிஷனர், கோயில் போலீஸ் இன்ஸ்பெக்டர், கோயிலின் தற்போதைய அறங்காவலர்கள் மற்றும் நிர்வாக அலுவலர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதன்படி நடைபெற்ற விசாரணையில் போலீஸ் கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர் இனிகோ திவ்யன், உதவி கமிஷனர் சசிபிரியா, திருப்பரங்குன்றம் கோயில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா உள்ளிட்டோர் ஆஜராகினர்.
அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் வீராகதிரவன், ரவீந்திரன் ஆஜராகினர். கோயில் நிர்வாகம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், போலீஸ் கமிஷனர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் இளங்கோ மற்றும் மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் அருண்சுவாமிநாதன், சுப்பையா ஆகியோர் வாதிட்டனர்.
அரசு தரப்பில் வாதிடுகையில், நீதிமன்றத்தின் புதிய உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கு கோயில் ஸ்தானிகரிடம் மட்டுமின்றி அறநிலையத்துறையிடமும் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் ஆகம விதிகளையும் கருத்தில் கொண்டு சட்டரீதியான ஒப்புதல் பெற வேண்டியுள்ளது என்றும் கூறினர்.
இதற்காக அறங்காவலர் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகவும், ஐந்து பேர் குழுவிற்கு பதிலாக ஸ்தானிகரையே வழிபாடு செய்ய அனுமதிக்கலாம் என்றும் அரசு தரப்பு வாதிட்டது.
இதற்கிடையில் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக அரசு இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்திருந்தது. அந்த அமர்வு, தமிழ் மாதமான கார்த்திகையில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது கோயில் நிர்வாகம் தனது குழுவின் மூலம் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதனால் தற்போதைய அவமதிப்பு வழக்கு நிலைக்கத்தக்கதல்ல என்றும் அரசு தரப்பு தெரிவித்தது. மேலும் இரு நீதிபதிகள் அமர்வின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இதற்கு பதிலளித்த நீதிபதி, உச்ச நீதிமன்றத்தின் புதிய உத்தரவு படி அவமதிப்பு வழக்கை தொடர முடியும் என்றும், நீதிமன்ற உத்தரவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் ஐந்து பேரை வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தான் பரிந்துரைத்ததாக தெரிவித்தார். அதிலிருந்தும் பின்வாங்கினால் எப்படி என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், கோயிலுக்குச் சொந்தமான சொத்தான தீபத்தூண் பகுதியை பாதுகாக்க கோயில் நிர்வாகம் தவறியதாகவும், அதன் உரிமையை நிலைநாட்ட மனுதாரர்களே நீதிமன்றத்தை அணுகியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
அதற்கு மனுதாரர்கள் தரப்பில், தேர்தல் சூழ்நிலை காரணமாக விசாரணையை தாமதப்படுத்த அரசு முயற்சிக்கிறது என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
இதற்கு நீதிபதி, இந்த வழக்கில் அரசியல் இடம் பெறக்கூடாது என்றும், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தாலும் வழக்கு விசாரணை தொடரும் என்றும் தெரிவித்தார்.
தற்போது தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறவில்லை என்றும், ஐந்து பேரை அங்கு சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் கருத்து என்றும் அவர் விளக்கினார்.
அனுமதி வழங்கப்பட்டால் வழக்கை முடித்து வைக்கலாம் என்றும், இல்லையெனில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் நீதிபதி எச்சரித்தார்.
மேலும் மலை உச்சியில் உள்ள தீபத்தூண் அருகே மலர் தூவி வழிபாடு நடத்த அனுமதி வழங்குவது குறித்து பதில் தெரிவிக்க கோயில் நிர்வாகம் அடுத்த விசாரணையில் ஆஜராக வேண்டும் என்றும் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா உள்ளிட்ட ஐந்து பேரை எதிர்மனுதாரர்களாக சேர்க்கலாம் என நீதிமன்றம் கருதியதாகவும், ஆனால் தற்போது சேர்க்கவில்லை என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
அதேபோல் போலீஸ் கமிஷனர் மற்றும் துணை கமிஷனர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்யலாம் என கருதியதாகவும், அரசு தரப்பில் அவகாசம் கோரியதால் அதைத் தவிர்த்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மார்ச் 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
