திருவள்ளூரில் கஞ்சா போதை கும்பல் வெறிச்செயல்: வங்கி ஊழியர் உட்பட இருவர் படுகொலை
திருவள்ளூர்: நண்பர்கள் இணைந்து பொங்கல் பண்டிகையை கொண்டாட ஆந்திரா சென்று திரும்பியபோது, திருவள்ளூரில் வங்கி ஊழியர் உட்பட இரு வாலிபர்கள் கஞ்சா போதையில் இருந்த கும்பலால் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மணவாளநகர் ஒண்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் (32), செவ்வாப்பேட்டை பல்லவன் வங்கியில் பணியாற்றி வந்தார். அவர் தனது நண்பர்களான கேசவமூர்த்தி (25), சுகுமார் (31) ஆகியோருடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக ஆந்திர மாநிலத்தில் உள்ள கோனே நீர்வீழ்ச்சிக்கு சென்றிருந்தார்.
நேற்று முன்தினம் இரவு சுமார் 7 மணியளவில் மூவரும் மணவாளநகருக்கு திரும்பி, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ராகவேந்திரா பேக்கரி அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, கஞ்சா போதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், இவர்களை மோதுவது போல் வேகமாக வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. பின்னர் அந்த இருவர் அங்கிருந்து சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, பார்த்திபன் மற்றும் அவரது நண்பர்கள் அருகில் உள்ள ஹோட்டலில் உணவு முடித்து, இரவு 10.30 மணியளவில் வெளியே வந்தபோது, முன்பு தகராறில் ஈடுபட்ட இருவருடன் மேலும் இருவர் சேர்ந்து மீண்டும் அவர்களை வழிமறித்தனர். தொடர்ந்து, வீண் தகராறில் ஈடுபட்டு, கற்களை எடுத்து மூவரையும் கொடூரமாக தாக்கினர்.
இந்த எதிர்பாராத தாக்குதலில் பார்த்திபன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுகுமார் மற்றும் கேசவமூர்த்தி இருவரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். தாக்குதலுக்குப் பிறகு போதை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.
அங்கிருந்த பொதுமக்கள், காயமடைந்த இருவரையும் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுகுமார் உயிரிழந்தார். கேசவமூர்த்தி ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்த பார்த்திபனுக்கு மனைவி மற்றும் இரண்டு வயது குழந்தை உள்ளனர். சுகுமாரின் மனைவி எட்டு மாத கர்ப்பிணியாக இருப்பது இந்த சம்பவத்தை மேலும் சோகமாக மாற்றியுள்ளது. இருவரின் மரணம் திருவள்ளூர் பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாவுக்கட்டு
மணவாளநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பார்த்திபன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. விவேகானந்தா சுக்லா உத்தரவின் பேரில், இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அதே பகுதியை சேர்ந்த ஜவகர் (23), வினோத்குமார் (36), ஜோதிஷ் (34), நீலகண்டன் (30) என்பது தெரிய வந்தது.
இதனிடையே, ஒண்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் பூந்தமல்லி–திருவள்ளூர் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கலைக்கப்பட்டது.
பின்னர், குற்றவாளிகள் மணவாளநகர் பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்ததும், போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது தப்பிச் செல்ல முயன்ற நீலகண்டன் மதில் சுவர் ஏறி குதித்தபோது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஜவகருக்கும் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. நால்வரையும் போலீசார் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, காயமடைந்த இருவருக்கு ‘மாவுக்கட்டு’ போட்டு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
கஞ்சா நுழைவாயில்?
திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே கஞ்சா போதையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், இந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு தி.மு.க., அரசே பொறுப்பு என அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூர் மாவட்டம் தமிழகத்தின் கஞ்சா நுழைவாயிலாக மாறி விட்டதாகவும், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு போதைப் பொருட்கள் தடையின்றி புழங்குவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த இரு இளைஞர்களின் கொடூர கொலைக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இருளர் காலனியில் அராஜகம்
இதே நேரத்தில், திருத்தணி அடுத்த தாழவேடு இருளர் காலனியில், நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 11 மணியளவில், கஞ்சா போதையில் வந்த ஆறு வாலிபர்கள், வீடுகள், குடிநீர் குழாய்கள் மற்றும் மின் விளக்குகளை சேதப்படுத்தினர். சத்தம் கேட்டு வெளியே வந்த பெண்கள் மற்றும் பொதுமக்களை ஆபாசமாக பேசியுள்ளனர்.
இதனைத் தட்டிக்கேட்ட ராமசாமி (50) என்பவரை இரும்பு ராடால் தாக்கி கும்பல் தப்பியது. படுகாயமடைந்த ராமசாமி முதலில் திருத்தணி அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அரசியல் பின்புலம்
இந்த கொடூர தாக்குதலில் தொடர்புடைய நீலகண்டன் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. அவர்மீது ஏற்கனவே மணவாளநகர் காவல் நிலையத்தில் பல குற்ற வழக்குகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜவகர், த.வெ.க., கட்சியின் பிரமுகர் எனவும் கூறப்படுகிறது.
கஞ்சா போதையா? காவல்துறை விளக்கம்
இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினரிடம் கேட்டபோது, “வழக்கில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மது போதையிலா அல்லது கஞ்சா போதையிலா இருந்தனர் என்பது மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உறுதியாகத் தெரியும்,” என அவர்கள் தெரிவித்தனர்.
