திருமண உதவித்தொகை வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்: திண்டுக்கல் அலுவலர் கைது
திண்டுக்கல்:
திருமண உதவித்தொகை வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, சமூகநல விரிவாக்க அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் நரசிங்கபுரம் வி.கள்ளுப்பட்டி பகுதியைச் சேர்ந்த பொறியாளர் பிரியதர்ஷன் (30), சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துள்ளார். கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு வழங்கப்படும் அரசு உதவித்தொகைக்காக, அவர் 2024 ஜூலை மாதம் விண்ணப்பித்திருந்தார். அந்த விண்ணப்பம் ஏற்கப்பட்டு, உதவித்தொகை மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கப்பட உள்ளதாக அவருக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்த உதவியை பெற உரிய ஆவணங்களுடன் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செயல்படும் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தை அணுகுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அறிவித்தனர். அதன்படி, பிரியதர்ஷன் தேவையான ஆவணங்களுடன் சமூகநல விரிவாக்க அலுவலர் **உமாராணி**யை சந்தித்தார்.
அப்போது, உதவித்தொகை பெற ரூ.6 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என உமாராணி கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அவ்வளவு பணம் இல்லை என பிரியதர்ஷன் தெரிவித்தபோது, ரூ.3 ஆயிரம் கொடுத்துவிட்டு உதவித்தொகையும் தங்கத்தையும் பெற்றுச் செல்லுமாறு அவர் கூறியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பிரியதர்ஷன் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், இன்ஸ்பெக்டர் ரூபா கீதாராணி தலைமையிலான போலீசார் திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொண்டனர். நேற்று காலை 11 மணியளவில், ரசாயனம் தடவிய பணத்தை பிரியதர்ஷன் உமாராணியிடம் வழங்கினார்.
அந்த பணத்தை பெற்றுக் கொண்ட நேரத்தில், அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் உமாராணியை கையும் களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து, அவரது அலுவலகத்தில் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டு, அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
