மதுரை: மதுரையில் ஹிந்துக்கள் கடவுளாக வணங்கும் ஒத்தக்கடை யானைமலையில் சிலுவை வைத்து வழிபாடு நடத்தப்பட்டதாக கூறி, பா.ஜ.க சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில செயலாளர் ஹரிஹர புத்திரன் ஒத்தக்கடை போலீசாரிடம் அளித்த புகாரில் கூறியதாவது: கிறிஸ்துவ அமைப்புகளை சேர்ந்த சிலர் சில நாட்களுக்கு முன்பு யானைமலையில் ஏறிச்சென்று சிலுவை வைத்து வழிபாடு நடத்தியுள்ளனர். பின்னர் அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
பல கிராமங்களை சேர்ந்த ஹிந்துக்கள் யானைமலையை கடவுளாக வணங்கி வருகின்றனர். சமணர் படுகைகள் கொண்ட இந்த மலை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் சிலுவை வைத்து யானைமலையை ஆக்கிரமிக்க முயற்சி செய்து, இப்பகுதி மக்களிடையே மத மோதலை ஏற்படுத்தும் முயற்சி நடைபெறுகிறது. சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையை தொடர்ந்து யானைமலையையும் ஆக்கிரமிக்க முயற்சி நடைபெறுகிறது என ஹிந்து அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
இதுகுறித்து ஹிந்து அமைப்பினர் கூறுகையில், “ஏற்கனவே திருப்பரங்குன்றம் மலையை குறிப்பிட்ட மதத்தினர் ஆக்கிரமிக்க முயன்றனர். அதை நீதிமன்றம் வரை சென்று போராட்டம் நடத்தி தடுத்தோம். தற்போது யானைமலையில் மற்றொரு மதத்தினர் வழிபாடு என்ற பெயரில் ஆக்கிரமிக்க முயற்சி செய்கின்றனர்.
இதனை உடனடியாக தடுக்கவில்லை என்றால் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு நடத்தி அந்த இடத்தை ஆக்கிரமித்து விட வாய்ப்பு உள்ளது. எனவே போலீசாரும் தொல்லியல் துறையும் கண்காணிக்க வேண்டும்,” என்றனர்.
இதுகுறித்து மதுரை எஸ்.பி. அரவிந்த் கூறுகையில், “தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ள இந்த மலை பொதுவானது என்றாலும், சிலுவை வைத்து வழிபாடு நடைபெற்றதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்,” என்று தெரிவித்தார்.
