கோவை: திருப்பரங்குன்றம் விவகாரம் பா.ஜ.கவுக்கு பெரிய சவாலாக உள்ளதாகவும், தி.மு.க. அரசை இந்த மண்ணை விட்டு அகற்ற அனைவரும் சபதம் எடுக்க வேண்டும் என்றும் பா.ஜ. தேசிய செயல் தலைவர் நிதின் நபின் தெரிவித்துள்ளார்.
கோவையில் பா.ஜ. மாநில தொழில்சார் பிரிவு சார்பில் நடைபெற்ற ‘புரபஷனல் கனெக்ட்–2026’ மாநாட்டில் அவர் பேசுகையில், பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா “ஒரே நாடு – உன்னத பாரதம்” என்ற இலக்கை நோக்கி முன்னேறி வருவதாக கூறினார். ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தின் மூலம் தொழில் வல்லுநர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பயனடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
2004 முதல் 2013 வரை தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தமிழகத்திற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், 2014க்கு பிறகு மோடி அரசு 6.5 லட்சம் கோடி ரூபாய் வழங்கியுள்ளதாக நிதின் நபின் சுட்டிக்காட்டினார். மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் தமிழகத்தில் ஒரு கோடி பேர் பயன் பெற்றுள்ளதாகவும், வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 90 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மூலம் 1.5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தி.மு.க. அரசு ஊழல் மற்றும் லஞ்சத்தில் ஊறிக் கொண்டிருப்பதாகவும், ஆன்மிகத்தை கொச்சைப்படுத்தும் செயல்களில் அமைச்சர்கள் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
“திருப்பரங்குன்றம் விவகாரம் நமக்கு சவாலாக உள்ளது. லஞ்சமும் ஊழலும் இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும். அதற்காக தி.மு.க. அரசை அகற்ற அனைவரும் சபதம் ஏற்போம்,” என அவர் வலியுறுத்தினார்.
