திருப்பரங்குன்றம் மலைமேல் செல்ல இஸ்லாமியருக்கு மட்டும் அனுமதி: போலீசாருடன் உள்ளூர் மக்கள் வாக்குவாதம்
திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றத்தில் நடைபெற உள்ள சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு, மலையில் உள்ள தர்காவிற்கு நேற்று காலை இஸ்லாமியர்கள் நான்கு பேருக்கு போலீசார் அனுமதி வழங்கியதை தொடர்ந்து, அப்பகுதி குடியிருப்போர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மதுரை, திருப்பரங்குன்றம் தீபத்தூண் தொடர்பான விவகாரம் காரணமாக, மலை மேலே பக்தர்கள் செல்ல போலீசார் ஏற்கனவே தடைவிதித்துள்ளனர். இந்த நிலையில், சந்தனக்கூடு திருவிழாவுக்காக மலையில் உள்ள தர்காவிற்கு இஸ்லாமியர்கள் நான்கு பேரை போலீசார் அனுமதித்ததாக தகவல் வெளியானதும், உள்ளூர் மக்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது போலீசார் தரப்பில் பேசிய உதவி கமிஷனர் சசிபிரியா, “கடந்த ஆண்டுகளில் கொடி ஏற்றியதும், இறக்கியதும் எப்படி நடைமுறையில் இருந்ததோ, அதே நடைமுறையில்தான் தற்போது கொடியை இறக்க செல்கிறார்கள். இதில் புதிய நடைமுறை எதுவும் இல்லை” என்று விளக்கம் அளித்தார்.
இதற்கு எதிர்வினையாற்றிய பொதுமக்கள், “நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தீபத்தூணில் தீபம் ஏற்ற எங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனால், எந்த நீதிமன்ற உத்தரவும் இல்லாமல் இஸ்லாமியர்களுக்கு எப்படி மலையில் செல்ல அனுமதி அளிக்கிறீர்கள்? முன்பு தீபத்தூணில் தீபம் ஏற்றியுள்ளனர். நீதிமன்றம் அனுமதி அளித்த பிறகும், அதனை போலீசாரே தடுத்து நிறுத்தினீர்கள்” என குற்றம்சாட்டினர்.
இதற்கு பதிலளித்த உதவி கமிஷனர், “அங்கு தீபம் ஏற்றியதை நீங்கள் பார்த்தீர்களா?” என கேள்வி எழுப்பினார். அதற்கு பொதுமக்கள், “நாங்கள் நேரில் பார்க்கவில்லை. எங்கள் மூதாதையர்கள் பார்த்துள்ளனர்; அவர்கள் பார்த்ததை எங்களிடம் கூறியுள்ளனர்” என்று தெரிவித்தனர். இதனையடுத்து, “இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது” என உதவி கமிஷனர் கூறினார்.
கடும் கட்டுப்பாடுகள்
இதற்குப் பிறகும் வாக்குவாதம் தொடர்ந்தது. “நீதிமன்ற உத்தரவிருந்தும் தீபம் ஏற்றுவதை தடுத்தது போலீசார் தானே? எங்களுக்கு மலைமேல் தீபம் ஏற்ற அனுமதி இல்லை. சுவாமி தரிசனம் செய்ய கூட மலைக்கு செல்ல முடியவில்லை. ஆனால், அவர்களது கொடியை ஏற்ற அனுமதிக்கிறீர்கள். இது என்ன நியாயம்? எங்கள் மலையில் எங்களுக்கே கும்பிட உரிமை இல்லாமல் போய்விட்டது” என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த உதவி கமிஷனர், “உங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி வழங்குங்கள். அதனை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கிறோம்” என்று கூறி அங்கிருந்து சென்றார்.
பகுதி மக்கள் குற்றச்சாட்டு
அப்பகுதி மக்கள் கூறுகையில், மலை படிக்கட்டு மற்றும் பெரிய ரதவீதிக்கு இடையே, மலை அடிவாரத்தில் பழனி ஆண்டவர் கோவில் தெரு அமைந்துள்ளது என்றும், இந்த தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன என்றும் தெரிவித்தனர்.
கார்த்திகை தீபம் நாளிலிருந்து தற்போது வரை, அனைத்து இடங்களிலும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு, அந்த பகுதியில் வசிக்கும் குடியிருப்போரை கூட வீட்டிற்குள் செல்ல அனுமதிக்காமல் போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
“எங்களை குற்றவாளிகளைப் போல நடத்துகிறார்கள். மேலே உள்ள காசி விசுவநாதர் கோவிலுக்கு செல்ல எங்களையும் அனுமதிக்க வேண்டும்” என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
