மதுரை: திருப்பரங்குன்றம் திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியில் இணைந்தார். திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதை அரசு தடுத்ததால் மன உளைச்சல் ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், கடந்த 30 ஆண்டுகளாக **திமுக**வில் இருந்து வந்தவர். கிளை செயலாளர், ஒன்றிய செயலாளர், 16 ஆண்டுகள் கவுன்சிலர் பதவி, மாவட்ட திட்டக் குழு துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்துள்ளார்.
இந்த நிலையில், இன்று தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அவர் அந்தக் கட்சியில் இணைந்தார்.
இதன் பிறகு அவர் கூறியதாவது: திமுகவில் ஜனநாயகம் இல்லை; சமத்துவமும் இல்லை. நான் ஆன்மிகவாதி. திருப்பரங்குன்றம் மலை உச்சித் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும், சிறுபான்மையினரின் ஓட்டு அரசியலுக்காக திமுக அதை மறுத்து வந்தது. இதனால் பாதிக்கப்பட்ட ஹிந்துக்களில் நானும் ஒருவர்.
திமுகவில் ஒன்றிய செயலாளர் பதவியில் இருந்தாலும், ஹிந்து என்ற உணர்வோடு இருந்த எனக்கு, இந்த சம்பவம் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. அதனால் தான் தற்போது தவெகவில் இணைந்துள்ளேன். இவ்வாறு கார்த்திகேயன் தெரிவித்தார்.
