நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு குமரமங்கலத்தில் அமைந்துள்ள 13ம் நூற்றாண்டை சேர்ந்த பொன்காளியம்மன் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பின் மூலம் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்த கோவிலை, புனரமைப்பு பணிகளின் ஒரு பகுதியாக மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இதற்கிடையே, பாலாலயம் செய்ய திட்டமிடப்பட்டதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து, பணிகளை தற்காலிகமாக நிறுத்த கோரி மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுதாரரின் அவசர கோரிக்கையை ஏற்று, நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை அவசரமாக எடுத்துக்கொள்ளும் வரை, கோவிலை இடிப்பது உள்ளிட்ட எந்தவொரு மராமத்து அல்லது கட்டுமான பணிகளையும் தொடங்கக்கூடாது என நீதிபதி இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
விசாரணையின் போது, கோவிலின் பழமை மாறாமல் புனரமைப்பு மட்டுமே நடைபெறுகிறது என அரசு தரப்பு விளக்கம் அளித்தது. பின்னர், கோவிலின் ஒரு பகுதியில் பணிகள் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போதைய நிலைமையை மாற்றக்கூடாது என நீதிபதி கண்டிப்புடன் குறிப்பிட்டார்.
நீதிமன்ற உத்தரவின் பின்னர், கோவிலில் எந்தவொரு பணிகளும் மேற்கொள்ளப்படாத நிலையில், அங்கு திரண்டிருந்த பக்தர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.
