சென்னை: திருச்சியில் இன்று நடைபெறும் அரசு நிகழ்ச்சியில், ரூ.5,650 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்.
கேரளா மாநிலத்தில் இருந்து பிரதமர் மோடி இன்று மாலை 4 மணியளவில் திருச்சி வந்தார். அங்கு நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ரூ.3,680 கோடி முதலீட்டில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் அமைக்கும் குழாய் வழித்தட இயற்கை எரிவாயு விநியோக திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னை அருகே மணலியில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ரூ.1,490 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள மசகு எண்ணெய் கலவை ஆலையையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
மேலும் பிரதமர் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 370 கி.மீ நீளமுள்ள 89 கிராமப்புற சாலைகளையும் திறந்து வைக்கிறார்.
தேசிய நெடுஞ்சாலை 81-ல் கங்கைகொண்ட சோழபுரம் அருகே பசுமை புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
அதேபோல் இரண்டு அம்ரித் பாரத் விரைவு ரயில்கள், இரண்டு விரைவு ரயில்கள் மற்றும் ஒரு பயணியர் ரயில் சேவையையும் பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.
இதனைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு திருச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், திருச்சியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பங்கேற்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதை பார்த்து திமுக பதற்றமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் திமுகவின் தவறான நிர்வாகம் மற்றும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை தமிழக மக்கள் புரிந்து கொண்டதால், நம்பிக்கை மற்றும் முன்னேற்றம் கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணி திட்டங்களுடன் மக்கள் அதிகமாக இணைந்து வருகிறார்கள் என்றும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
