திருச்சி: திருச்சியில் ஜனவரி 5ம் தேதி நடைபெற உள்ள பொங்கல் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்க உள்ளார் என, தமிழக பா.ஜ., பொதுச்செயலர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தொடங்கிய பிரசார பயணம் தமிழகம் முழுவதும் 52 மாவட்டங்களில் நடைபெற்றதாக கூறினார். இந்தப் பயணத்தின் நிறைவு நிகழ்ச்சி ஜனவரி 4ம் தேதி புதுக்கோட்டையில் நடைபெற உள்ளதாகவும், அதில் அமித் ஷா பங்கேற்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ஜனவரி 5ம் தேதி காலை திருச்சி மன்னார்புரம் ராணுவ மைதானத்தில், தமிழகத்தின் பாரம்பரியமான பொங்கல் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில், 2,000 பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அன்றைய தினம், தமிழக பா.ஜ., உயர்மட்ட குழு மற்றும் மையக் குழு உறுப்பினர்களை சந்திக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளதாகவும், அதில் தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலுக்கான தயாரிப்புகள் குறித்து அமித் ஷா ஆலோசனைகள் வழங்க உள்ளதாகவும் முருகானந்தம் தெரிவித்தார்.
மேலும், புதுக்கோட்டை மற்றும் திருச்சியில் நடைபெறும் இந்த கட்சி நிகழ்ச்சிகளில், கூட்டணி கட்சித் தலைவர் பழனிசாமி பங்கேற்க வாய்ப்பில்லை என்றும், அவர் அன்றைய தினம் சேலத்தில் பிரசார பயணத்தில் இருப்பதாகவும் கூறினார். பழனிசாமியின் பிரசார சுற்றுப்பயணம் நிறைவடைந்த பின், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
