சென்னை: திமுக வாக்குகளில் பெரும்பகுதி நடிகர் விஜயின் தவெக கட்சிக்கு மாறும் என்று எதிர்பார்ப்பதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
சென்னையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: சென்னையில் பாமக இளைஞரணி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் திமுக அரசை எதிர்த்து, அதிமுக கூட்டணியை ஆதரிக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தில் மோசமான நிர்வாகம் நடைபெற்று வருகிறது. இதுவரை 12 முதல்வர்கள் மாநிலத்தை ஆட்சி செய்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்களால் சூழப்பட்டுள்ளார். சமூக நீதி குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது. இவற்றின் அடிப்படை காரணம் ஊழல், வசூல், கமிஷன். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. மாநிலம் முழுவதும் போதைப்பொருள் கலாசாரம் பரவி இருப்பது திமுக அரசின் தோல்வியை காட்டுகிறது.
தமிழகத்தில் 7000 கொலைகள் நிகழ்ந்துள்ளன. வேளாண் வளர்ச்சியில் முன்னேற்றம் இல்லை. அரசின் வெற்றுத் திட்டங்கள் மக்களை சென்றடையவில்லை. எதிர்க்கட்சிகள் சிதறியிருந்ததால் திமுக தேர்தலில் எளிதாக வெற்றி பெற்றது.
ஆனால் இன்று எதிர்க்கட்சிகள் வலிமையான கூட்டணியாக உருவாகியுள்ளன. முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்துள்ளார். சட்டசபை தேர்தலில் திமுக ஒற்றை இலக்க இடங்களையே பெறும். எங்கள் கூட்டணி 200க்கும் அதிகமான தொகுதிகளை வெல்லும்.
திமுக அரசு மீது மக்கள் கோபமாக உள்ளனர். எனது கட்சி விவகாரத்தில் தலையிட்டதால் நானும் கோபமாக இருக்கிறேன். குழப்பத்தை ஏற்படுத்தி எதிர்க்கட்சிகளை பிரிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. பாமகவை உடைக்க முடியாது. இதற்கு முன் இல்லாத அளவுக்கு தற்போது நாங்கள் எழுச்சி பெற்றுள்ளோம்.
இம்முறை திமுகவின் வாக்குகளில் பெரும்பங்கு தவெகவுக்கு செல்லும் என்று எதிர்பார்க்கிறேன். அது எங்கள் கூட்டணிக்கு பெரிய வெற்றியை தரும். திமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும்.
இவ்வாறு அன்புமணி தெரிவித்தார்.
