திமுக ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி ஊழல்; கவர்னரிடம் இபிஎஸ் புகார்
சென்னை: திமுக அரசு கடந்த நான்கரை ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளதாகக் குற்றம்சாட்டி, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கவர்னர் ஆர்.என். ரவியிடம் புகார் மனு அளித்துள்ளார்.
சென்னை லோக்பவனில் கவர்னரை சந்தித்த இபிஎஸ், திமுக அரசு மற்றும் அமைச்சர்கள் மீது சுமத்தப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விரிவான பட்டியலை வழங்கினார். இந்த சந்திப்பின் போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இபிஎஸ், 2021 முதல் திமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து துறை வாரியாக விவரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். திமுக குடும்பம் கோடிக்கணக்கில் கொள்ளையடித்து தமிழகத்தை கடன் சுமையில் தள்ளியுள்ளதாகவும், பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இதனை சுட்டிக்காட்டியுள்ளதாகவும் கூறினார்.
ரூ.4 லட்சம் கோடி ஊழல் குற்றச்சாட்டு
இபிஎஸ் வெளியிட்ட தகவலின்படி,
உயர் கல்வித்துறையில் – ரூ.1,500 கோடி
நகராட்சி நிர்வாகத்தில் – ரூ.64,000 கோடி
பத்திரப்பதிவு துறையில் – ரூ.20,000 கோடி
சென்னை மாநகராட்சியில் – ரூ.10,000 கோடி
ஹிந்து சமய அறநிலையத்துறையில் – ரூ.1,000 கோடி
டாஸ்மாக்கில் – ரூ.50,000 கோடி
நீர்வளத்துறையில் – ரூ.17,000 கோடி
எரிசக்தித் துறையில் – ரூ.50,000 கோடி
என மொத்தமாக நான்கரை ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
விசாரணை கோரிக்கை
திமுக அரசின் ஊழல்களுக்கு முழுமையான ஆதாரம் இருப்பதாக கூறிய இபிஎஸ், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என கவர்னரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை வரவேற்பதாகவும், அது அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்றும் கூறினார். பொங்கல் பரிசு தொகையை ரூ.3,000-இல் இருந்து ரூ.5,000-ஆக உயர்த்த வேண்டும் என்றும் இபிஎஸ் வலியுறுத்தினார்.
