புதுடில்லி: தமிழக மக்கள், திமுக அரசின் ஊழல் நடைமுறைகள் மற்றும் தமிழ் கலாசாரத்திற்கு எதிரான போக்கால் கடும் அதிருப்தியில் இருப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், பாஜ தேர்தல் பொறுப்பாளராகவும் மத்திய அமைச்சராகவும் உள்ள பியூஷ் கோயல், டில்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜ தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி பெறுவது எளிதான ஒன்றாக இருக்கும் என அவர் கூறினார்.
திமுக அரசு திறமையற்ற நிர்வாகத்துடன், பரவலான ஊழல்களில் சிக்கியுள்ளதாகவும், மிக மோசமான ஆட்சியை நடத்தி வருவதாகவும் பியூஷ் கோயல் விமர்சித்தார். முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக தலைமை, தமிழ் கலாசாரத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டு, இந்தியாவுக்கு எதிரான மனப்பான்மையுடன் செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், திமுக கூட்டணிக்குள் கூட கருத்து வேறுபாடுகள் வெளிப்படையாக தெரிகின்றன என்றும் அவர் கூறினார்.
இந்த நிலைமையால், அதிமுக–பாஜக கூட்டணி தமிழகத்தில் எளிதாக வெற்றி பெறும் சூழல் உருவாகியுள்ளதாக பியூஷ் கோயல் தெரிவித்தார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெறுப்பை தூண்டும் வகையில் பேசுபவர் என்றும், அவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், நடிகர் விஜய் குறித்து பேசிய பியூஷ் கோயல், ரசிகர் மன்றங்களை மட்டுமே வைத்துக் கொண்டு தேர்தல் அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்றும், அவர் ஓட்டு பிரிப்பாளராக மட்டுமே செயல்படுவார் என்றும் விமர்சித்தார்.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்ட இந்த கருத்துகள், தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் தவெக ஆதரவாளர்களிடையே பரபரப்பான விவாதங்களை உருவாக்கியுள்ளது.
