திமுக அரசை அதிமுக – பாஜ கூட்டணி அகற்றும்: இபிஎஸ்
திமுக ஆட்சியை பாஜ உடன் இணைந்து அகற்றுவோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உடன் தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இபிஎஸ், நீண்ட இடைவேளைக்குப் பிறகு பியூஷ் கோயலை சந்தித்து பேசினதாக கூறினார்.
தமிழகத்தின் தற்போதைய நிலவரங்கள் குறித்து பியூஷ் கோயல் கேட்டறிந்ததாகவும், 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு அதிமுக–பாஜ மற்றும் தேஜ கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டதாகவும் இபிஎஸ் தெரிவித்தார். மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதற்கான திட்டம் குறித்தும் பேச்சு நடைபெற்றதாக அவர் கூறினார்.
தமிழக மக்கள் கொந்தளிப்புடன் இருப்பதாகவும், திமுக ஆட்சியை அகற்றுவதற்கான பணியை அதிமுக–பாஜ கூட்டணி முன்னெடுக்கும் என்றும் இபிஎஸ் தெரிவித்தார். சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்றும் அவர் கூறினார்.
இதற்கு முன்பாக, பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் பேசுகையில், தனது நண்பரும் சகோதரருமான இபிஎஸ்-ஐ சந்தித்துப் பேசியதில் மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்தார். இன்றைய சந்திப்பில் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் குறித்து விவாதம் நடைபெற்றதாகவும் அவர் கூறினார்.
பிரதமர் **நரேந்திர மோடி**யின் வழிகாட்டுதலுடன் 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்வோம் என்றும், அந்த தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும் பியூஷ் கோயல் தெரிவித்தார். திமுகவின் ஊழல் ஆட்சியில் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், மீனவர்கள், சிறுகுறு தொழில்கள், சிறு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தகர்களுக்கு சிறந்த எதிர்காலம் வழங்கும் அரசு தமிழக மக்களுக்கு கிடைப்பது மிகவும் அவசியம் என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தின் சகோதரர் சகோதரிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்குவதே தேஜ கூட்டணியின் உறுதிமொழி என்றும், அதுவே பிரதமர் மோடியின் உறுதிமொழி என்றும் அவர் குறிப்பிட்டார். அதிமுக, பாஜ மற்றும் தேஜ கூட்டணி கட்சிகள் இணைந்து தமிழகத்தின் பொன்னான எதிர்காலத்திற்காக பாடுபடுவார்கள் என்றும் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
