திமுக அரசுக்கு நயினார் கேள்வி
தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தனது எக்ஸ் பதிவில், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசுக் காப்பகங்களைச் சேர்ந்த சிறுமிகள் தொடர்ந்து காணாமல் போவதும், தப்பிச் செல்வதும் தொடர்பான செய்திகள் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் ஆண்டுதோறும் போக்ஸோ வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், அரசுக் காப்பகங்களில் இருந்து மாயமான குழந்தைகள் பாலியல் தொழில்களுக்காகக் கடத்தப்பட்டார்களா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த சம்பவங்களில் காப்பகக் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அல்லது அரசியல்வாதிகளுக்கு தொடர்பு உள்ளதா, அல்லது காப்பகங்களில் நிலவும் கொடுமைகளைத் தாங்க முடியாமல் குழந்தைகள் ஓடிச் சென்றார்களா என்ற பல கேள்விகள் எழுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒடுக்கப்பட்ட மற்றும் ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய அரசுக் காப்பகங்கள், திமுக ஆட்சியில் அடிப்படை வசதிகள் இல்லாமை, தரமற்ற உணவு வழங்கல், சாதி ரீதியான தாக்குதல்கள் மற்றும் பாலியல் சீண்டல்கள் அதிகரித்ததால், பாதுகாப்பான இடங்களாக இல்லாமல் அச்சுறுத்தும் சூழலாக மாறியுள்ளதாக சமீபத்திய செய்திகள் தெரிவிப்பதாக நயினார் நாகேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெண் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி அனைவரும் சிந்திக்க வேண்டிய முக்கியமான விவகாரம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
எனவே, தமிழகத்தின் அனைத்து குழந்தைகளும் தன்னை “அப்பா” என்று அழைக்க வேண்டும் என விரும்பும் முதல்வர் ஸ்டாலின், அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் காப்பகங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்து, பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, தமிழக பாஜக சார்பில் கோரிக்கை விடுப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
