சென்னை: விக்கிரவாண்டி மாநாட்டில் கூறிய ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என்ற கருத்து தற்போது கூட்டணிகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்தார்.
சேலத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் அவர் பேசியதாவது: நான் அரசியலுக்கு வந்தது தவறா? பிற கட்சி நிகழ்ச்சிகளுக்கு அனுமதியும் பாதுகாப்பும் கிடைக்கிறது. ஆனால், எனக்கு மட்டும் அனுமதி இல்லை. கூட்டம் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் எனக்கு மட்டுமே விதிக்கப்படுகின்றன.
எதிர்க்கட்சியினரின் கூட்டணி கணக்குகளும், பணத்தை கொடுத்து ஓட்டு வாங்கும் கலாசாரமும் இனி நடக்காது. ஓட்டுக்கு 5,000 ரூபாய் என பணம் வழங்கும் நடைமுறை ஒழிய வேண்டும். அவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு, அவர்களின் காதிலேயே விசிலை ஊதுங்கள்.
தி.மு.க. ஆட்சியை மக்கள் நிராகரிப்பார்கள். வீட்டில் உள்ள குழந்தைகள் அனைவரும் பிரசாரம் செய்ய வேண்டும். அரசியலில் அனுபவம் இல்லை என கூறப்படுகின்றது. அதிகாரத்தை பயன்படுத்திய அனுபவம் அவர்களுக்கு இருக்கலாம். ஆனால், நமக்கு கொள்ளை அடிக்கும் அனுபவம் இல்லை; அதை செய்யவும் மாட்டோம்.
நல்லாட்சி வழங்க மக்களை நேசிக்கும் குணம் இருந்தால் போதும். தனித்து நிற்கும் த.வெ.க. மக்கள் ஆதரவை பெற்று வருகிறது. தற்போதைய ஆட்சி மக்கள் விரோதமாக உள்ளது. பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகள் சரியாக இல்லை.
போதை கலாசாரம் கட்டுக்குள் இல்லை. நிரந்தர டி.ஜி.பி. நியமிக்கப்பட வேண்டும். மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவது நமது முதல் வேலையாக இருக்கும். நடைமுறைக்கு சாத்தியமில்லாத வாக்குறுதிகளை வழங்க மாட்டேன்.
மக்களுக்காக எந்த எல்லைக்கும் சென்று போராடுவேன். தேர்தலில் நேரடி போட்டி நிலவுகிறது. விக்கிரவாண்டி மாநாட்டில் கூறிய கருத்து தற்போது கூட்டணிகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கூட்டணி வெற்றிக்காக மட்டுமே அமைகிறது. இதன் பொருள் புரிய வேண்டியவர்களுக்கு புரியும்.
