சென்னை: சட்டசபை தேர்தலை முன்னிட்டு தி.மு.க. மற்றும் காங்கிரஸ் இடையே நடைபெறும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தி.மு.க. தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள 25 தொகுதிகள் காங்கிரசுக்கு ஏற்றதல்ல என தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர் தெரிவித்துள்ளார்.
கூட்டணிக்குள் ஆட்சியில் பங்கு, 41 தொகுதிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து காங்கிரஸ் தரப்பு தி.மு.க. தொகுதி பங்கீடு குழுவுடன் பேச்சு நடத்தியது. ஆனால் ஆட்சியில் பங்கு வழங்க முடியாது என்றும், 25 தொகுதிகளுக்கு மேல் வழங்க முடியாது என்றும் தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க.வுடன் ஒரு மணி நேரம் விவாதித்ததாகவும், தாங்கள் வழங்கிய விருப்ப பட்டியலை தி.மு.க. ஏற்றுக் கொள்வார்கள் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு போதுமான முன்னுரிமை கிடைக்க வேண்டும் என்றும், அதனால் மட்டுமே ராஜ்யசபாவில் தங்களது உறுப்பினர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
தி.மு.க. முன்வைத்துள்ள 25 தொகுதிகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், தாங்கள் விரும்பும் தொகுதிகளை வழங்கினால் மட்டுமே பேச்சுவார்த்தை தொடர முடியும் என்றும் தெரிவித்தார்.
மேலும் கடந்த காலங்களில் தி.மு.க. பலவீனமாக இருந்த போது காங்கிரஸ் தங்களுக்கு கிடைக்க வேண்டிய இடங்களை குறைத்ததாகவும், தற்போது தி.மு.க. திருப்பித் தர வேண்டிய நிலை உருவாகியுள்ளது என்றும் கூறினார்.
இதற்கிடையில் நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க. கட்சியை குறைத்து மதிப்பிட முடியாது என்றும், இளைஞர்களிடையே அந்தக் கட்சி ஈர்ப்பை பெற்றுள்ளதாகவும் கிரீஷ் ஷோடங்கர் குறிப்பிட்டார்.
