சென்னை: திமுக–காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதாகவும், தவெகவுடன் கூட்டணி பேச்சு நடைபெறுகிறது என்ற தகவல்கள் வதந்தி என்றும் தமிழக காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவுடன் கூட்டணி தொடருவது குறித்து முடிவு எடுத்து, அதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். கடந்த ஒரு மாதமாகவே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், திமுகவுடன் நம்பகத்தன்மை கொண்ட கூட்டணி நிலவுகிறது என்றும் தெரிவித்தார்.
2026 சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தேர்தலை முன்னிட்டு பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார். தவெகவுடன் கூட்டணி பேச்சு நடைபெறுகிறது என்ற தகவலை அவர் திட்டவட்டமாக மறுத்து, அது முற்றிலும் வதந்தி என்றார்.
காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற உட்கட்சி விவகாரங்கள் பொதுவெளியில் பேசப்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஜோதிமணியிடமும், கரூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளிடமும் விளக்கம் கேட்டுள்ளதாகவும், இந்த விவகாரம் அகில இந்திய தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
