தி.மு.க. அரசு இந்துக்களுக்கு விரோதமாக செயல்படுகிறது: இந்து முன்னணி குற்றச்சாட்டு
கோவை: கடவுள் மறுப்பு கொண்ட தி.மு.க. அரசு முழுக்க இந்துக்களுக்கு மட்டும் விரோதமாக செயல்பட்டு வருகிறது என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம் சாட்டினார்.
கோவையில் நடைபெற்ற இந்து வியாபாரிகள் நலச்சங்க மாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை பெருநகரில் போலீசார் மாமூல் வசூலிப்பதும், ரவுடிகள் மிரட்டுவதும் அதிகரித்துள்ளதாக கூறினார். இதனால் இந்து வியாபாரிகள் பாதுகாப்பற்ற சூழலில் இயங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அரசின் இலவசத் திட்டங்களை விமர்சித்த அவர், கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழக அரசு ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு கடன் வாங்கியுள்ளதாக கூறினார். பொங்கல் பரிசுத்தொகை பெறுவோரின் பட்டியலை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்றும், அதில் ஊழல் நடக்க வாய்ப்புள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படாததால் ஒருவர் உயிர் தியாகம் செய்ததாக குறிப்பிட்ட அவர், சிதம்பரம் கோயிலில் நடந்த சம்பவங்களை அரசு மற்றும் காவல் துறை வேடிக்கை பார்த்ததாக குற்றம் சாட்டினார். மேலும், மலைப்பகுதிகளில் ஆடு, கோழி பலியிட அனுமதி அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
இந்த அரசு நாத்திக அரசு என்றும், கடந்த நான்கரை ஆண்டுகளில் 175-க்கும் மேற்பட்ட இந்து கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளதாகவும், மசூதி மற்றும் சர்ச்கள் இடிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். சட்டவிரோத சர்ச்கள் குறித்து பட்டியல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், இந்து கோயில் சொத்துகள் மற்றும் நிலங்களை அரசு அபகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
