சென்னை:
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற்றாக, தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை கடந்த ஜனவரி 3ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பிற்குப் பிறகும், இடைநிலை ஆசிரியர்கள் ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி தங்களது போராட்டத்தை தொடர்ந்து வந்தனர். இதற்கிடையே, புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை கடந்த ஜனவரி 6ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது.
அமைச்சரவை ஒப்புதலை தொடர்ந்து, தமிழக அரசு இன்று (ஜனவரி 10) உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில், இந்த ஓய்வூதிய திட்டம் 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்ததாக முன்தேதியிட்டு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
