காஞ்சிபுரத்தில் நடைபெற்ற 17-வது பழங்குடியின இளைஞர் பரிமாற்றத் திட்ட நிகழ்ச்சியில், தமிழக கவர்னர் ரவி மாணவர்களை நோக்கி உரையாற்றினார்.
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், உள்துறை அமைச்சகம் இணைந்து சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா மற்றும் ஒடிஷா மாநிலங்களைச் சேர்ந்த 200 பழங்குடியின மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர்.
நிகழ்ச்சியில் பேசிய காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைஞர் பரிமாற்றத் திட்டம் தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் முயற்சி என குறிப்பிட்டார். தமிழகத்தின் அருமை, பெருமைகளை பங்கேற்ற மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களில் பகிர்வார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து உரையாற்றிய கவர்னர் ரவி, பாரதத்தின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் இத்தகைய திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்றார். தமிழகத்தில் அவர்கள் காணும் விஷயங்கள் மற்றும் அனுபவங்களை டைரியில் பதிவு செய்யுமாறும் அறிவுறுத்தினார். மேலும், தமிழில் சில வாக்கியங்களை கற்றுக்கொண்டு, தமிழக கலாசாரத்தை சமூக வலைதளங்களில் பகிர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் ‘மை பாரத்’ மாநில இயக்குநர் செந்தில்குமார், கல்லுாரி தலைவர் ராமச்சந்திரன், முதல்வர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இளைஞர் பரிமாற்ற விழா வரும் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது.
