தமிழரல்லாதோரின் வசதிக்காக உருவாக்கப்பட்டதே திராவிடம்” – சீமான்
தூத்துக்குடி: ஜல்லிக்கட்டு வளாகத்திற்கு கருணாநிதியின் பெயரை சூட்டியிருப்பது குறித்து தி.மு.க. அரசை விமர்சித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “அவர் மாடுபிடி வீரரா?” என கேள்வி எழுப்பினார்.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் நடைபெற்ற வேலு நாச்சியார் நினைவு பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், வேலு நாச்சியார் வழியில் வந்த தமிழ் பெண்கள் இன்று ஆயிரம் ரூபாய்க்கு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். பெண்களுக்கு உரிமைகள் ஈ.வெ. ராமசாமி வந்த பிறகுதான் கிடைத்தது என்ற கருத்தை மறுத்த அவர், வேலு நாச்சியார் ஏழு மொழிகளில் தேர்ச்சி பெற்றவர் என்றும், வாள், வில், சிலம்பம், குதிரை ஏற்றம் உள்ளிட்ட போர் பயிற்சிகளில் நிபுணராக இருந்தவர் என்றும் நினைவூட்டினார்.
திராவிட அடையாளங்களை முன்வைத்து ஆட்சி நடத்துவதாக கூறும் தற்போதைய ஆட்சியாளர்கள், ஆயிரம் ரூபாய்க்கு ஓட்டு போடும் நிலையை உருவாக்கியுள்ளதாக சீமான் குற்றம்சாட்டினார். திராவிடம் என்பது தமிழன் அல்லாதவன் வாழ்வதற்காக உருவாக்கப்பட்ட அடையாளம் என்றும் அவர் விமர்சித்தார்.
டாஸ்மாக் கட்டடம் இடிந்து உயிரிழப்பு ஏற்பட்டதில்லை; ஆனால், திராவிட மாடல் ஆட்சியில் அரசு பள்ளி கட்டடங்கள் இடிந்து மாணவர்கள் உயிரிழக்கிறார்கள் என அவர் சாடினார். ஜல்லிக்கட்டு வளாகம் கட்ட பல நூறு கோடி ரூபாய் வேண்டாம் என்றும், கம்பு கட்டி போட்டி நடத்திக்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மட்டுமே கேட்ட நிலையில், வளாகத்திற்கு கருணாநிதி பெயரை வைத்ததாக குறிப்பிட்ட சீமான், “அவர் ஜல்லிக்கட்டு விளையாடினாரா, மாட்டை அடக்கினாரா, மாடுபிடி வீரரா?” என கேள்வி எழுப்பினார். எதை போற்ற வேண்டும், எதை கண்டிக்க வேண்டும் என்பதே தெரியாமல் ஒரு கூட்டம் செயல்படுகிறது என்றும் அவர் கூறினார்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற கருத்துக்கு அடித்தளம் போட்டதே நான்தான் என்றும், தனது கட்சியின் வண்ணக்கொடியே த.வெ.க.வுக்கும் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். தன்னை எத்தனை பேர் பேரம் பேசியும் விலைக்கு வாங்க முடியவில்லை என்றும் கூறிய சீமான், வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் மாநாட்டில், 234 தொகுதிகளிலும் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என அறிவித்தார்.
