சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் இந்த முறை வித்தியாசமான முறையில் நடைபெறும்; அதை மக்கள் காண்பார்கள் என தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் தெரிவித்தார்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்றும், தமிழகத்தின் குடஓலை தேர்தல் முறை வரலாற்று பெருமை வாய்ந்தது என்றும் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் பெண் வாக்காளர்கள் ஆண்களை விட அதிகம் இருப்பது பெருமை என தெரிவித்தார். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பிறகும் தகுதியுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் சேர முடியும் என்றார். எஸ்.ஐ.ஆர். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் வெற்றிகரமாக நடந்துள்ளதாகவும், 267 புகார்கள் மட்டுமே வந்ததாகவும் கூறினார்.
18–19 வயதுக்குள் 12.51 லட்சம் இளைஞர்கள், 20–29 வயதுக்குள் 1.05 கோடி இளைஞர்கள் வாக்காளர்களாக இருப்பதால் இம்முறை இளைஞர்களுக்கு முக்கிய கவனம் அளிக்கப்படும் என்றார்.
ஒரு ஓட்டுச்சாவடிக்கு அதிகபட்சம் 756 வாக்காளர்கள் என ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், முதல்முறையாக விவிபேடில் வேட்பாளரின் கலர் புகைப்படம் இடம்பெறும் என்றும் தெரிவித்தார். ஓட்டுப்பதிவு நாளில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு சதவீதம் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றார்.
ஆதார் இணைப்பு கட்டாயமில்லை என்றும், தேர்தல் தேதி பண்டிகை மற்றும் தேர்வுகளை கருத்தில் கொண்டு அறிவிக்கப்படும் என்றும் கூறினார். பரிசுப் பொருட்கள் மற்றும் பணப்பட்டுவாடா குறித்த கேள்விக்கு, பீஹார் தேர்தலை விட தமிழக தேர்தல் சிறப்பாகவும் வித்தியாசமாகவும் இருக்கும் என்றார்.
பிளஸ் 2 தேர்வுகள் மற்றும் மதுரை சித்திரை திருவிழாவை கருத்தில் கொண்டு, ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
