தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இணைந்துள்ளது.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி-ஐ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில், பாமக அதிமுக கூட்டணியில் இணைவதை அன்புமணி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி,
“அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. இது தொண்டர்கள் விரும்பிய கூட்டணி. மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றி, தமிழகத்தில் வலிமையான ஆட்சி அமைப்பதே எங்களின் இலக்கு. 234 தொகுதிகளிலும் இந்த கூட்டணி பெரும் வெற்றி பெறும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அன்புமணி ராமதாஸ்,
“எங்கள் தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணியில் பாமக இணைந்துள்ளது மகிழ்ச்சியான தருணம். திமுகவின் ஊழல், மக்கள் விரோத ஆட்சியை அகற்றுவதே எங்கள் நோக்கம். கிராம மக்களிடையே திமுக மீது கடும் அதிருப்தி உள்ளது. இந்த கூட்டணி உறுதியாக வெற்றி பெறும்” எனத் தெரிவித்தார்.
