தண்ணீரை பகிர்ந்து கொள்ளுமாறு கோர முடியாது: பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் திட்டவட்ட பதில்
சென்னை: தண்ணீரை பகிர்ந்து கொள்ளுமாறு இந்தியாவிடம் பாகிஸ்தான் கோர முடியாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற சர்வதேச ஆராய்ச்சி அறக்கட்டளை தொடக்க விழாவில் உரையாற்றிய அவர், பயங்கரவாதத்திலிருந்து தனது மக்களை பாதுகாக்க இந்தியா தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என கூறினார். நட்பு நாடு எது, எதிரி நாடு எது என்பதை இந்திய வெளியுறவுத்துறை தெளிவாக அறிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் இந்தியா அதை ஏற்றுக்கொள்ளாது என்றும், பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரிக்கும் அண்டை நாட்டிற்கு எதிராக தன்னை பாதுகாத்துக்கொள்ள இந்தியாவுக்கு முழு உரிமை உள்ளதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார். அந்த உரிமையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது இந்தியாவின் முடிவு என்றும், என்ன செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது என்று யாரும் அறிவுறுத்த முடியாது என்றும் அவர் கூறினார்.
மேலும், “எங்கள் தண்ணீரை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு நீங்கள் எங்களிடம் கோர முடியாது. அதேபோல், எங்கள் நாட்டில் பயங்கரவாதத்தைப் பரப்பவும் முடியாது,” என பாகிஸ்தானை சுட்டிக்காட்டி ஜெய்சங்கர் கடுமையாக பேசினார். ஒரு நாடு வேண்டுமென்றே, விடாப்பிடியாக மற்றும் எந்த வருத்தமும் இல்லாமல் பயங்கரவாதத்தை தொடர முடிவு செய்துள்ளதாகவும், பல ஆண்டுகளாக தொடரும் இந்த நிலை காரணமாக அந்த நாடு நல்ல அண்டை நாடாக இருக்க முடியாது என்றும் அவர் கூறினார். எனவே, அண்டை நாட்டுக்கான நன்மைகளைப் பெறும் தகுதியும் அவர்களுக்கு இல்லை என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
