புதுடில்லி: தங்கத்தின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்திற்கு உலகளாவிய நிச்சயமற்ற தன்மையே முக்கிய காரணம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும், பல மத்திய வங்கிகள் தங்கத்தில் முதலீடு செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து நிர்மலா சீதாராமன் கூறுகையில், உலகளாவிய நிச்சயமற்ற தன்மை காரணமாக தங்க விலைகளில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது என்றார். முதலீட்டாளர்களுக்கு எந்த ஒரு குறிப்பிட்ட நாணயத்தின் மீதும் முழு நம்பிக்கை இல்லாத நிலை இருப்பதையே இது காட்டுகிறது என்றும், அதனால் பல மத்திய வங்கிகள் தங்கத்தை முதலீட்டு வாய்ப்பாக தேர்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், மார்ச் 9-ம் தேதி தொடங்க உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாதியில், திவால்நிலை குறியீடு தொடர்பான திருத்த மசோதாவை அரசு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
நிதிப் பற்றாக்குறை இலக்கு ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார நிலைமையைப் பொறுத்தே நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும், கடந்த ஆண்டுகளில் அரசு முந்தைய நிதியாண்டுகளை விட குறைந்த நிதிப் பற்றாக்குறையை நிர்ணயித்து வந்துள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் விளக்கினார்.
இந்த நிதியாண்டில் அரசின் முன்னுரிமை வளர்ச்சிதான் என்றும், முதலீடுகளை விற்று சொத்துக்களை பணமாக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து வேகமெடுக்கும் என்றும் தெரிவித்தார். பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் முதலீட்டை மேலும் விற்பதற்கும் அரசு ஊக்குவிக்கும் என அவர் கூறினார்.
