பொள்ளாச்சி: “தி.மு.க. அரசு, டெல்டா விவசாயிகளின் நலனை அடமானம் வைத்து காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளது” என்று தமிழக பா.ஜ. முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற “பிரதமரின் மக்கள் மருந்தகம்” குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
பிரதமர் மோடி கடந்த 2014ஆம் ஆண்டு மக்கள் மருந்தகம் திட்டத்தை அறிமுகப்படுத்திய போது 40 கடைகள் மட்டுமே தொடங்கப்பட்டன. தற்போது அது 18 ஆயிரம் கடைகளை கடந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 1,300 மக்கள் மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டில் அது 25 ஆயிரமாக உயரும்.
இந்த கடைகளில் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் கிடைக்கின்றன. இது வருமானத்திற்காக தொடங்கப்பட்ட திட்டம் அல்ல, சேவைக்காக தொடங்கப்பட்டது. மக்களுக்கு தேவையான மருந்துகள் குறைந்த விலையில் உரிய நேரத்தில் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த திட்டத்தை பிரதமர் கொண்டு வந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு முதன்மை தேர்வுக்கு ரூ.7,500, மெயின் தேர்வுக்கு ரூ.25,000, நேர்முகத் தேர்வுக்கு ரூ.50,000 வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ள முதல்வர் ஸ்டாலினை பாராட்டுகிறோம். பிற மாநிலங்களைப் போல இந்த ஊக்கத்தொகையை மேலும் அதிகரிக்கலாம்.
அதே நேரத்தில், முதல்வர் தனது கடமையை செய்து விட்டு அதை விளம்பரப்படுத்துவதை கண்டிக்கிறோம். கடமையை விளம்பரம் இல்லாமல் செய்ய வேண்டும்.
கர்நாடகாவில் காங்கிரசை சேர்ந்த முதல்வர் சித்தராமையா மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போது திமுக–காங்கிரஸ் கூட்டணி உறுதியான பின்னரே இந்த அறிவிப்பு வந்துள்ளது.
திமுக அரசு டெல்டா விவசாயிகளின் நலனை அடமானம் வைத்து காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ளது. டெல்டா விவசாயிகளுக்கு திமுக அரசு துரோகம் செய்துள்ளது என்று அண்ணாமலை தெரிவித்தார்.
