புதுடில்லி: தலைநகர் டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் ஏஐ மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். ஐந்து நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
ஏஐ மாநாடு 2023ல் பிரிட்டனில் உள்ள பக்கிங்ஹாம் பிளெச்சலி பூங்காவில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 2024ல் தென் கொரியாவின் சியோல் நகரிலும், 2025ல் பிரான்சின் பாரீசிலும் நடந்தது. இவ்வருடம் இந்தியாவின் தலைநகர் டில்லி மாநாட்டை நடத்துகிறது. இம்மாநாடு வரும் 20ம் தேதி வரை நடைபெறும்.
மாநாட்டை முன்னிட்டு ஏஐ கண்காட்சிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 19ம் தேதி நடைபெறும் அமர்வில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இம்மாநாட்டில் ஐநா பொதுச்செயலாளர் அன்டானியோ குட்டரஸ் கலந்து கொள்கிறார்.
பிரான்ஸ் அதிபர் மேக்ரான், இலங்கை அதிபர் திசநாயக்கா, பூடான் பிரதமர் ஷெரீங் டோப்கே, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் மற்றும் 45 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
மேலும், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் தலைவர் பிராட் ஸ்மித், ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களின் நிர்வாகிகளும் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
மனித வள மேம்பாடு, சமூக முன்னேற்றம், பாதுகாப்பான ஏஐ தொழில்நுட்பம், அறிவியல் ஆராய்ச்சி, புதுமை கண்டுபிடிப்பு உள்ளிட்ட ஏழு முக்கிய துறைகள் குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.
