நியூயார்க்:
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டிற்கு தலைமை ஏற்றதற்காக இந்தியாவை பாராட்டுவதாக, ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
டில்லியில் வரும் பிப்ரவரி 19 மற்றும் 20ம் தேதிகளில், செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற உள்ளது. இதில், இந்தியா ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சிக்காக மேற்கொண்டு வரும் திட்டங்கள் மற்றும் அதன் எதிர்கால தாக்கங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க, ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் இந்தியா வர உள்ளார்.
இந்த உச்சி மாநாட்டிற்கு தலைமை பொறுப்பை ஏற்றதற்காக இந்தியாவை அவர் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அன்டோனியோ குட்டரெஸ் கூறியதாவது:
ஏஐ உச்சி மாநாட்டில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிக முக்கியமானதாக உருவெடுத்துள்ளது. அதுகுறித்து விரிவாக விவாதிப்பது மிகவும் அவசியம்.
இந்த உச்சி மாநாட்டிற்கு தலைமை ஏற்றதற்காக இந்தியாவை நான் பாராட்டுகிறேன். ஒரு வளரும் நாடாக இருந்தாலும், இந்தியாவுக்கு ஏற்கனவே குறிப்பிடத்தக்க திறன்கள் உள்ளன. மனித குலம் அடையப்போகும் நன்மையே இந்த உச்சிமாநாட்டின் மைய நோக்கமாக இருக்கும். இந்த மாநாடு அனைவருக்கும் வளர்ச்சியை ஏற்படுத்தும்.
இதன் மூலம், செயற்கை நுண்ணறிவின் உண்மையான தாக்கங்களை மதிப்பிட தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
