புதுடில்லி: ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூஸிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து இந்திய அணிக்கு பிரதமர் மோடி சமூக வலைதளத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில் கூறியதாவது: உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்த அசாதாரண வெற்றி வீரர்களின் அபார திறமை, உறுதிப்பாடு மற்றும் குழு முயற்சியை பிரதிபலிக்கிறது. தொடர் முழுவதும் அவர்கள் வெளிப்படுத்திய மனவலிமை பாராட்டத்தக்கது.
இந்த வெற்றி ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் பெருமையாலும் மகிழ்ச்சியாலும் நிரப்பியுள்ளது. இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
தலைவர்கள் பாராட்டு
ஜனாதிபதி திரவுபதி முர்மு:
இந்த வெற்றி வரலாற்றுச் சாதனை. நாட்டிற்கு பெருமை சேர்த்த வீரர்கள், அணியின் நிர்வாகம் மற்றும் ஆதரவு பணியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவித்தார்.
துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்:
மூன்றாவது டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பாராட்டுகள் தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா:
மின்னல் வேகத்தில் சிறப்பாக விளையாடிய இந்திய அணிக்கு பாராட்டுகள். தொடர்ந்து இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை வென்ற முதல் அணியான இந்தியாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்:
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணியின் அற்புதமான வெற்றிக்கு பாராட்டுகள். சஞ்சு சாம்சன் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக விளையாடியதாக குறிப்பிட்டார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்:
டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். கடந்த 3 போட்டிகளில் சஞ்சு சாம்சன் நிதானமாக பேட்டிங் செய்து முக்கியமான தருணங்களில் சிறப்பாக விளையாடியதை பார்த்ததில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.
