அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
இதன் மூலம் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை 3-வது முறையாக வென்ற முதல் அணி என்ற சாதனையை படைத்தது. மேலும் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்த முதல் அணி என்ற பெருமையையும், சொந்த மண்ணில் முதன்முறையாக டி20 உலகக் கோப்பையை வென்ற வரலாற்றையும் இந்திய அணி பதிவு செய்தது. இந்தியா இதற்கு முன் 2007 மற்றும் 2024 ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பையை வென்றிருந்தது.
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை எந்த அணியும் 3 முறை கோப்பையை வென்றதில்லை. அதிகபட்சமாக மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகள் தலா இரண்டு முறை மட்டுமே சாம்பியன் பட்டம் பெற்றிருந்தன. இந்த முறை பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.27.48 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பெற்ற நியூஸிலாந்து அணி ரூ.14.65 கோடி பெற்றது.
இறுதிப் போட்டியில் ஆட்டநாயகனாக பும்ரா தேர்வு செய்யப்பட்டார். தொடரின் சிறந்த வீரராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டார்.
வீரர்கள் கருத்து
இந்திய வீரர் திலக் வர்மா கூறுகையில், “டி20 கோப்பையை தக்கவைத்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த கோப்பையை வெல்லும் நோக்கத்துடன் அணி தயாராகி வந்தது. வீரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து சிறப்பாக விளையாடி கோப்பையை கைப்பற்றியுள்ளோம்,” என்றார்.
அர்ஷ்தீப் சிங் கூறுகையில், “கோப்பையை வென்ற மகிழ்ச்சி அளவிட முடியாத ஒன்று. இன்னும் சில நாட்கள் இந்த உற்சாகம் தொடரும். அணியில் ஏராளமான மேட்ச் வின்னர்கள் உள்ளனர்,” என்றார்.
ஷிவம் துபே கூறுகையில், “என் பங்கு பெரிய சிக்ஸர்களை அடிப்பதுதான். கிடைக்கும் சந்தர்ப்பங்களில் அந்தப் பொறுப்பை நான் நிறைவேற்றி வருகிறேன். எதிர்காலத்தில் பந்துவீச்சிலும் முன்னேற்றம் காண முயற்சி செய்வேன்,” என்றார்.
அபிஷேக் சர்மா கூறுகையில், “சில போட்டிகளில் குறைந்த ரன்களில் அவுட்டானபோதும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் என்மீது நம்பிக்கை வைத்தனர். அந்த நம்பிக்கையே என்னை மீண்டும் முன்னேற்றியது,” என்றார்.
வருண் சக்ரவர்த்தி கூறுகையில், “உலகக் கோப்பையை வென்றதில் மிகுந்த மகிழ்ச்சி. இறுதி ஆட்டத்தில் அபிஷேக் சர்மா விளையாடிய விதம் அசத்தலாக இருந்தது,” என்றார்.
போட்டி சிறப்பம்சங்கள்
இந்தப் போட்டியில் இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்களான சஞ்சு சாம்சன் 89, அபிஷேக் சர்மா 52, இஷான் கிஷன் 54 ரன்கள் எடுத்தனர். டி20 உலகக் கோப்பை வரலாற்றில் டாப் 3 வீரர்கள் அனைவரும் அரை சதம் அடித்தது இதுவே முதன்முறையாகும்.
மேலும் இந்திய அணி 7.2 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. டி20 உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றில் இவ்வளவு வேகமாக 100 ரன்களை எட்டியது இதுவே முதல் முறை.
நியூஸிலாந்து அணியின் லாக்கி பெர்குசன் தனது முதல் இரண்டு ஓவர்களில் 48 ரன்களை விட்டுக்கொடுத்து மோசமான சாதனையை பதிவு செய்தார்.
ரசிகர்கள் கொண்டாட்டம்
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியை காண 86,824 ரசிகர்கள் திரண்டிருந்தனர். போட்டி தொடங்குவதற்கு முன்பு பிரபல பின்னணிப் பாடகி கவிதா கிருஷ்ணமூர்த்தி தேசிய கீதத்தை பாடினார்.
2023-ம் ஆண்டு இதே மைதானத்தில் 50 ஓவர் உலகக் கோப்பை இறுதியில் இந்தியா தோல்வி கண்டிருந்தது. ஆனால் தற்போது அதே மைதானத்தில் டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியதால் இந்திய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
