டி20 உலக கோப்பை: நெதர்லாந்தை 17 ரன்னில் வீழ்த்திய இந்தியா
ஆமதாபாத்: டி20 உலக கோப்பை 2026 தொடரில், நெதர்லாந்து அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் இந்தியா 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர். ஆனால் அபிஷேக் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். தொடர்ந்து இஷான் கிஷன் 18 ரன்களில் வெளியேறினார்.
அடுத்து வந்த திலக் வர்மா 31 ரன்களும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 34 ரன்களும் சேர்த்து அணியின் ரன் வேகத்தை உயர்த்தினர். பின்னர் அதிரடியாக விளையாடிய ஷிவம் துபே, 6 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடித்து அரைசதம் கடந்தார். இறுதியில் அவர் 66 ரன்களில் அவுட் ஆனார். ஹர்திக் பாண்ட்யா 30 ரன்கள் சேர்த்தார். ரிங்கு சிங் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து தரப்பில் லோகன் வான் பீக் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
194 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு லெவிட் மற்றும் மேக்ஸ் ஓ’டவுத் தொடக்கத்தை வழங்கினர். லெவிட் 24 ரன்களில் பாண்ட்யா பந்தில் அவுட் ஆனார். மேக்ஸ் ஓ’டவுத் 20 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து பேஸ் டி லீடி 33 ரன்களும், கோலின் ஆக்கர்மேன் 23 ரன்களும் எடுத்தனர்.
கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 15 ரன்களில் பும்ரா பந்தில் போல்ட் ஆனார். இறுதியில் லயன் கேசெட் 26 ரன்களில் அவுட் ஆனார். நோவா க்ரோஸ் 25 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர் முடிவில் நெதர்லாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.
இந்திய தரப்பில் வருண் 3 விக்கெட்டுகளும், ஷிவம் துபே 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்த வெற்றியுடன் இந்தியா லீக் சுற்றில் தனது 4வது வெற்றியை பதிவு செய்தது.
