சென்னை:
அதிமுக ஆட்சி அமைந்தால், ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டி உயிரிழக்கும் வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் சாலப்பாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை இபிஎஸ் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் 600 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். போட்டியைத் தொடங்கி வைத்து பேசிய அவர், ஜல்லிக்கட்டு என்பது நமது முன்னோர்கள் விட்டுச் சென்ற பாரம்பரிய விளையாட்டு என குறிப்பிட்டார்.
இளைஞர்கள் காளைகளை அடக்கி தங்கள் திறமையை வெளிப்படுத்தும் இந்த விளையாட்டு, தமிழர்களின் கலாசார அடையாளமாக திகழ்கிறது என்றும், இத்தகைய பாரம்பரிய விளையாட்டை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்த குழுவினருக்கு தனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்தார்.
அதிமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன், ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று காளைகளால் தாக்கப்பட்டு உயிரிழக்கும் வீரர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அவர் அறிவித்தார்.
மேலும், ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள பதிவு செய்த அனைத்து வீரர்களுக்கும் அரசு சார்பில் காப்பீடு செய்து வழங்கப்படும் என்றும் கூறினார். அதேபோல், போட்டியில் பங்கேற்கும் அனைத்து காளைகளையும் கணக்கெடுத்து, அவற்றுக்கும் காப்பீடு செய்து தரப்படும் எனவும் இபிஎஸ் தெரிவித்தார்.
