லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அரசுமுறை பயணமாக ஜப்பான் சென்ற நிலையில், முதல் நாளிலேயே 11,000 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
நான்கு நாள் வெளிநாட்டு பயணத்தின் ஒரு பகுதியாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் சென்றுள்ள அவர், சிங்கப்பூரில் பல பன்னாட்டு நிறுவனங்களுடன் முதலீட்டு பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
ஜப்பானில் பிரபல நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் சந்திப்பு நடத்திய பின், பல துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. விவசாய மற்றும் தொழில்துறை இயந்திர உற்பத்தியில் முன்னணி நிறுவனமான குபோடா கார்ப்பரேஷன், மின்சார வாகன உதிரிப்பாக உற்பத்தியாளர் மிண்டா கார்ப்பரேஷன், ஆட்டோமொபைல் மற்றும் விண்வெளித் துறையில் செயல்படும் ஜப்பான் ஏவியேஷன் எலக்ட்ரானிக் இண்டஸ்ட்ரி உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ரசாயனங்கள், மின்னணு மற்றும் உயர் செயல்திறன் பிரிண்டிங் மைகள் தயாரிக்கும் நிறுவனங்களுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் உள்கட்டமைப்பு, வாகனத் துறை, கிராபிக்ஸ் மற்றும் விருந்தோம்பல் உள்ளிட்ட துறைகளில் முதலீடுகள் வர உள்ளன.
