புதுடில்லி: நாட்டின் ஜனாதிபதி திரவுபதி முர்முவை மேற்கு வங்க அரசும் திரிணமுல் காங்கிரசும் அவமதித்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங் மாவட்டம் கோசைப்பூரில் சர்வதேச சந்தால் சமூக மாநாடு நடைபெற்றது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டார்.
இந்த மாநாட்டிற்காக ஒதுக்கப்பட்ட இடம் மிகவும் சிறியது என்றும், பான்சிதேவா என்ற இடத்தில் நிகழ்ச்சியை நடத்த அனுமதி கேட்டபோது அது மறுக்கப்பட்டதாக பாஜ குற்றம்சாட்டியுள்ளது.
நிகழ்ச்சிக்கான இடம் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டதை ஜனாதிபதி திரவுபதி முர்மு குறிப்பிட்டு தனது அதிருப்தியையும் வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில் ஜனாதிபதியின் அதிருப்தி மற்றும் மாநாட்டுக்கான இட அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் குறித்து பிரதமர் மோடி மேற்கு வங்க அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஜனாதிபதியை மேற்கு வங்க அரசும் திரிணமுல் காங்கிரசும் அவமதித்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:
இந்த சம்பவம் வெட்கக்கேடானது மற்றும் இதற்கு முன் இல்லாத ஒன்றாகும். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட பழங்குடி சமூகத்தினர் இதனால் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.
பழங்குடி சமூகத்தை சேர்ந்த ஜனாதிபதி வெளிப்படுத்திய வேதனை மற்றும் கவலை நாட்டு மக்களின் இதயங்களில் ஆழ்ந்த துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள திரிணமுல் காங்கிரஸ் அரசு அனைத்து வரம்புகளையும் கடந்துவிட்டது. அதன் நிர்வாகமே ஜனாதிபதிக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு காரணமாக உள்ளது.
சாந்தல் கலாசாரம் போன்ற முக்கிய விஷயத்தை மேற்கு வங்க அரசு சாதாரணமாக எடுத்துக் கொண்டது துரதிருஷ்டவசமானது.
ஜனாதிபதி பதவி என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது. அதன் கண்ணியம் எப்போதும் காக்கப்பட வேண்டும். இதை மேற்கு வங்க அரசும் திரிணமுல் காங்கிரசும் நினைவில் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
