மஸ்கட் / அடிஸ் அபாபா:
ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு, இரண்டு நாடுகளில் உயரிய அரச விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா – ஓமன் உறவுகளை மேலும் வலுப்படுத்தியதற்கான அங்கீகாரமாக, ஓமன் நாட்டின் சுல்தான் ஹைதம் பின் தாரிக், பிரதமர் மோடிக்கு சுல்தானகத்தின் மிக உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் ஓமன்’ விருதை வழங்கினார். மஸ்கட்டில் நடைபெற்ற இரண்டு நாள் அரசியல் சுற்றுப்பயணத்தின் போது இந்த விருது வழங்கப்பட்டது.
இந்த விருது முன்னதாக பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், நெதர்லாந்து ராணி மேக்சிமா, ஜப்பான் பேரரசர் அகிஹிட்டோ, நெல்சன் மண்டேலா மற்றும் ஜோர்டான் மன்னர் அப்துல்லா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்தப் பட்டியலில் பிரதமர் மோடியும் இடம் பெற்றுள்ளார்.
அதேபோல், எத்தியோப்பியா பயணத்தின் போது, அந்நாட்டின் உயரிய அரச விருதான ‘கிரேட் ஹானர் ஆப் எத்தியோப்பியா’ பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.
பிரதமர் மோடி செல்லும் நாடுகளில் வழங்கப்படும் இந்த சிறப்பு வரவேற்பும், உயரிய அரச விருதுகளும், சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பும், செல்வாக்கும் தொடர்ந்து உயர்ந்து வருவதை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.
