சென்னை: தமிழகத்தில் மின்சார பஸ்களுக்கான மின் கட்டணம், பிற மாநிலங்களை விட அதிகமாக இருப்பதால், சென்னையில் மின்சார பஸ்களை இயக்குவதற்கான செலவு கூடுதலாக உள்ளது என, தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மின்சார பஸ்களை இயக்க தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் தொகை, மற்ற மாநிலங்களை விட அதிகம் என, நமது நாளிதழில் கடந்த 29ஆம் தேதி செய்தி வெளியானது. இதையடுத்து, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.
மாநகர போக்குவரத்து கழகத்தின் விளக்கம்
பிற மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில், மின்சார பஸ்கள் மத்திய அரசின் ‘பேம்–2’ திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப்படுகின்றன. புதிய பஸ்களை வாங்குவதற்கு முன்பணமாக குறிப்பிட்ட தொகை வழங்கப்படுகிறது. அதேபோல், ஒவ்வொரு மாநிலத்திலும் மின்சார கட்டண விகிதம் வேறுபடுகிறது.
இதன் காரணமாக, ஒரு கிலோ மீட்டருக்கு மின்சார பஸ்கள் இயக்க வழங்கப்படும் தொகையும் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. மின் கட்டணத்தைப் போலவே, நிலையான கட்டணங்களிலும் மாநிலங்களுக்கிடையே வேறுபாடு காணப்படுகிறது.
பல மாநிலங்களில் மின்சார பஸ்களுக்கான மின் கட்டணம், யூனிட் ஒன்றுக்கு 4 ரூபாய் முதல் 7 ரூபாய் வரை உள்ளது. ஆனால் தமிழகத்தில், ஒரு யூனிட்டிற்கு 9 ரூபாய் 75 பைசா வசூலிக்கப்படுகிறது. இதேபோல், பிற மாநிலங்களில் ஒரு கிலோ வாட்டுக்கு நிலையான கட்டணம் 200 ரூபாயாக இருக்கும் நிலையில், தமிழகத்தில் அது 304 ரூபாயாக உள்ளது. இதன் காரணமாக, சென்னையில் மின்சார பஸ்களின் செயல்பாட்டு செலவு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில் தாழ்தள மின்சார பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் பல பிற மாநிலங்களில் சாதாரண தள மின்சார பஸ்களே இயக்கப்படுகின்றன. தாழ்தள பஸ்களுக்கு பராமரிப்பு செலவு அதிகமாகும் என்றும் விளக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின்சார பஸ்களை இயக்க ஒரு கிலோ மீட்டருக்கு 13 ரூபாய் 26 பைசா செலவாகிறது. இதைத் தவிர, நிர்வாகம் சார்பில் கூடுதல் செலவுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
பிற மாநிலங்களில், மின்சார பஸ்களை அந்தந்த மாநில அரசுகளே கொள்முதல் செய்வதோடு, அவற்றை இயக்க தேவையான கட்டமைப்புகளையும் அமைத்துக் கொடுக்கின்றன. இதனால், அங்கு மின்சார பஸ்கள் இயக்குவதற்கான கட்டணம் குறைவாக இருப்பது போல் தோன்றுகிறது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஜிசிசி முறைப்படி, கடந்த ஆண்டு குஜராத்தில் வழங்கப்பட்ட ஒப்பந்தத்திலும், 225 மின்சார பஸ்களுக்கு தலா ஒரு கிலோ மீட்டருக்கு 94 ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கட்டணம் குறைவாக இருப்பதை காட்டுவதற்காக, பிற மாநிலங்களில் நிர்ணயிக்கப்பட்ட மின் கட்டணத்தையும் தமிழகத்தின் மின் கட்டணத்தையும் ஒப்பிட்டு, அதன் வித்தியாசத்தை அந்த மாநிலத்தின் கிலோ மீட்டர் கட்டணத்தில் சேர்த்து, தமிழகத்தை விட அங்கு கட்டணம் அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
