சென்னை: வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து சென்னையில் பிரியாணி கடை நடத்தி வந்த இரண்டு பேரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் கடந்த 6ஆம் தேதி வெளிநாடு செல்லும் பயணிகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது முகமது ஆரூண் (44) என்ற நபர் போலி இந்திய பாஸ்போர்ட் பயன்படுத்தி வங்கதேசம் செல்ல முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் முகமது ஆரூண் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், 1999ஆம் ஆண்டு திரிபுராவின் ஸ்ரீமந்தாபூர் எல்லை வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தது தெரியவந்தது. பின்னர் அவர் பலமுறை சட்டவிரோதமாக வங்கதேசத்துக்கும் சென்று வந்துள்ளார்.
2022ஆம் ஆண்டு தனது வங்கதேச பாஸ்போர்ட் மூலம் இந்தியா வந்த அவர், சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள ஒரு பிரியாணி கடையில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் சொந்தமாக பிரியாணி கடை நடத்தி வந்துள்ளார்.
தனது வங்கதேச குடியுரிமையை மறைத்து, போலியாக இந்திய ஆதார் அட்டை மற்றும் பான் அட்டை பெற்றுள்ளார். அதன் அடிப்படையில் இந்திய பாஸ்போர்ட்டையும் பெற்றிருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் அவரது உறவினரான வலி யுல்லா (40) என்பவரும் கடந்த 2025ஆம் ஆண்டு திரிபுரா எல்லை வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளார்.
பின்னர் சென்னைக்கு வந்து முகமது ஆரூண் நடத்தி வந்த பிரியாணி கடையில் வேலை செய்துள்ளார். அவர் ‘பாபுல் உசேன்’ என்ற பெயரில் போலியான ஆதார் அட்டை பெற்றதும் போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இருவரையும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
